நோ டைம் லிமிட்: டெலிவரி ஊழியர்களுக்கு நேரக் கெடு இனி இல்லை

டெலிவரி ஊழியர்களுக்கு நேரக் கெடு இனி இல்லை. மத்திய அரசின் கோரிக்கையை டெலிவரி நிறுவனங்கள் ஏற்றுள்ளது.;

Update:2026-01-13 21:24 IST

புதுடெல்லி,

சோமாட்டோ, ஸ்விக்​கி, பிளிங்​கிட், இன்​ஸ்​டா​மார்ட் மற்​றும் ஜெப்டோ போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநி​யோகம் செய்கின்றன. டிசம்பர் 25 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் இந்த நிறுவனங்களின் டெலிவரி தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது, பணிச்சூழல், டெலிவரி அழுத்தம் மற்றும் பணி பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை எழுப்பினர். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறுகிய நேர டெலிவரி விளம்பரங்கள் ஊழியர்களுக்கு கடுமையான பணி அழுத்தத்தை உருவாக்குவதாக தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனை தொடர்ந்து மத்திய தொழிலாளர் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் ‘10 நிமிட டெலிவரி' உள்ளிட்ட குறுகிய கால டெலிவரி குறித்த விளம்பரத்தை நீக்குமாறு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, பிளிங்கிட் தனது அனைத்து விளம்பரங்களிலும் இருந்து ‘10 நிமிட டெலிவரி’ என்ற விளம்பரத்தை நீக்கியுள்ளது. ஊழியர்களுக்கு ஏற்படும் பணி அழுத்தம், சாலைப் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் நேரக் கெடு விதிப்பதைக் கைவிடமத்திய அரசு அறிவுறுத்தியதை ஏற்று பிளிங்கிட் நடவடிக்கை எடுத்துள்ளது. டொமோட்டோ, ஸ்விகி, ஜிப்டோ உள்ளிட்ட நிறுவனங்களும் இதை பின்பற்றும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அனைத்து நிறுவனங்களும் தங்கள் விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்களிலிருந்து குறுகிய கால டெலிவரி நேர வாக்குறுதிகளை அகற்றுவதற்கு அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்