வேட்டையாட சென்றபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் இறந்த வழக்கில் நண்பர்கள் 2 பேர் கைது

ஒசநகர் அருகே, வேட்டையாட சென்றபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் இறந்த வழக்கில் உடன் சென்ற நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2022-09-20 00:30 IST

சிவமொக்கா;

மந்திரி அரக ஞானேந்திரா

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் (தாலுகா) டவுன் அருகே நேகிலோனி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பரீஷ்(வயது 29). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் நேகிலோனி கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஒசநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அம்பரீஷ், துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்திருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது மர்மமாக இருந்தது. இதற்கிடையே அம்பரீசின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சிவமொக்காவில் உள்ள போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவின் வீட்டுக்கு நேரில் சென்றனர்.

வேட்டையாட சென்றார்

அவர்கள் மந்திரி அரக ஞானேந்திராவை நேரில் சந்தித்து அம்பரீசின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுபற்றி தீவிர நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டனர். அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டார். அதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், ஒசநகர் போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சம்பவத்தன்று அம்பரீஷ், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் கீர்த்தி, நாகராஜ் ஆகியோருடன் சென்று வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சென்றதும், அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் இறந்துவிட்டதும் தெரியவந்தது.

சாட்சிகளை கலைத்து...

மேலும் கீர்த்தியும், நாகராஜும் சேர்ந்து சாட்சிகளை கலைத்து இச்சம்பவத்தில் இருந்து தப்பிக்கவும் முயன்றுள்ளனர். அதாவது கீர்த்தி தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை மறைத்து வைத்துவிட்டு அதற்கு பதிலாக வேறொரு துப்பாக்கியை வைக்க முயன்றுள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் கீர்த்தியின் வீட்டில் சோதனை செய்தபோது, அம்பரீசின் உடலில் பாய்ந்திருந்த குண்டும், கீர்த்தியின் வீட்டில் இருந்த துப்பாக்கி தோட்டாவும் ஒரே வகைதான் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

அதன் அடிப்படையில் கீர்த்தியை பிடித்து போலீசார் விசாரித்தபோதுதான் அம்பரீசின் சாவு எப்படி நிகழ்ந்தது என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

2 பேர் கைது

இதையடுத்து கீர்த்தி, நாகராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்