இண்டிகோ நிறுவனத்தின் சிக்கலுக்கு காரணம் என்ன?

2 நாட்கள் கட்டாயமாக விமானிக்கும், விமான பணியாளர்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று புதிய விதி கூறுகிறது;

Update:2025-12-05 20:55 IST

புதுடெல்லி,

விமான விபத்துக்களை தவிர்க்க விதிமுறைகளை சரிசெய்ய வேண்டும் என்று சமீபத்தில் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சிவில் விமான போக்குவரத்து துறையானது, புதிய விதிமுறைகளை வகுத்திருந்தது. இந்த விதிமுறைகளின்படிதான் இனி விமான ஊழியர்களை வேலை வாங்க முடியும். எனவே இதன் அடிப்படையில் ஷிப்ட் ரோஸ்டர்களை போட உத்தரவிட்டது. முன்பு ஒரு விமானி தொடர்ச்சியாக 18 மணி நேரம் வரை பறக்கலாம் என்று விதி இருந்தது. ஆனால், இந்த விதி காரணமாக தற்போது 8 மணி நேரமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல இரவு நேரங்களில் 6 முறை விமானங்களை லேண்ட் செய்யலாம் என்று பழைய விதிமுறை தெரிவித்திருந்தது. புதிய விதிமுறையின்படி 2 முறை மட்டுமே விமானங்களை லேண்ட் செய்ய முடியும். இது மட்டுமல்லாது முன்பு, வாரத்தில் 36 மணி நேரம் மட்டும் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த விடுப்பு தற்போது 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தொடர்ந்து வழங்க வேண்டும். அதாவது 2 நாட்கள் கட்டாயமாக விமானிக்கும், விமான பணியாளர்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று புதிய விதி கூறுகிறது. புதிய விதிகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது கடுமையான அபராதங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை பாயும்.

இந்த விதிகள் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மட்டுமே பொருந்தும். இந்த விதிகளை அமல்படுத்த விமான நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. நவம்பர் 1-ந்தேதி இறுதி நாளாக சொல்லப்பட்டிருந்தது. இதையடுத்து ஏர் இந்தியா, ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் போன்ற நிறுவனங்கள் இந்த காலத்தை பயன்படுத்தி, கூடுதலாக ஆட்களை நியமித்து தப்பித்துக்கொண்டன. இண்டிகோ நிறுவனம் இவ்வளவு காலம் அவகாசம் வழங்கியும், கூடுதலாக ஆட்களை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததே தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இதனிடையே டிசம்பர் 5 மிக மோசமான நாள். பயணிகளிடம் வருத்தம் தெரிவித்தார் இண்டிகோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எல்பர்ஸ்.இண்டிகோ நிறுவன சேவையில் இடையூறு ஏற்பட்டதையொட்டி வருத்தம் தெரிவித்து காணொளி வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்