மராத்தா சமூக தலைவர் விநாயக் மேதே மரணம் குறித்து சி.ஐ.டி. விசாரணை- முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு
மராத்தா சமூக தலைவர் விநாயக் மேதே விபத்தில் பலியான வழக்கை சி.ஐ.டி போலீசார் விசாரிக்க முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.;
மும்பை,
மராத்தா சமூக தலைவர் விநாயக் மேதே விபத்தில் பலியான வழக்கை சி.ஐ.டி போலீசார் விசாரிக்க முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.
விபத்தில் பலி
மராத்தா சமூக தலைவரும், முன்னாள் எம்.எல்.சி.யுமான விநாயக் மேதே (வயது 52) கடந்த 14-ந் தேதி மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக மும்பையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்திக்க புனேயில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். காரை அவரது டிரைவர் ஏக்நாத் கதம் ஓட்டி வந்தார்.
அப்போது லாரி ஒன்றை முந்த முயன்ற போது அவரது கார் மீது மற்றொரு வாகனம் மோதியது. இந்த விபத்தில் விநாயக் மேதே உயிரிழந்தார்.
சி.ஐ.டி. போலீசார்
இந்த சம்பவம் மராத்தா சமூகத்தினர் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விநாயக் மேதேயின் மனைவி கூறியிருந்தார். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் இன்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, விநாயக் மேதே விபத்தில் பலியான வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.