பசுமை கலந்த புதுமை திருமணங்கள்

திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்கு ஆசைப்படுபவர்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள்.

Update: 2019-08-11 09:36 GMT
திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்கு ஆசைப்படுபவர்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள். சிக்கனத்தை கடைப்பிடிப்பதற்கு முனைப்பு காட்டும் இளைய தலைமுறையினர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும் தங்கள் திருமணம் அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

சமீபகாலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமான ‘பசுமைத் திருமணங்கள்’ அதிகரித்து கொண்டிருக்கின்றன. அலங்காரத்தில் தொடங்கி அணிகலன்கள் வரை அத்தகைய திருமணங்களில் புதுமைகள் புகுந்து கொண்டிருக்கின்றன.

பசுமைத் திருமண ஜோடிகள் வரிசையில் இணைந்திருக்கிறார்கள், பிரஷின் ஜாகர் - தீபா கமாத். மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அலங்காரங்கள், காகித அழைப்பிதழ்களுக்கு மாற்றாக இணைய தளம் வழியேயான மின் அழைப்பிதழ்கள் என்று திருமணத்தில் புதுமை படைத்திருக்கிறார்கள். எந்த வகையிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இடம் கொடுக்காமல் இடம்பிடித்த இவர்களின் திருமணம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

திருமணத்தின் ஒரு அங்கமாக நடக்கும் மோதிரம் மாற்றும் வைபவத்திற்கு மரத்தில் தயாரிக்கப்பட்ட மோதிரத்தை பயன்படுத்தியும் அசத்தி இருக்கிறார்கள். அதே நேரத்தில் திருமணத்துக்காக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பொருட்களை தேர்ந்தெடுப்பது பிரஷின் - தீபா தம்பதியருக்கு சவாலான விஷயமாகவே இருந்திருக்கிறது.

‘‘சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாத பொருட்கள் எவை என்பதை கண்டறிவதில் தவறான புரிதல் இருக்கிறது. எவையெல்லாம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் என்பதை தீர்மானிப்பதில் வியாபாரிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே குழப்பம் நிலவுகிறது. மட்கும் தன்மை அல்லாதவைகளை கூட மக்கிவிடும் என்று வாதிடுகிறார்கள். நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுவதுதான் எங்கள் முதல் நோக்கம். அதற்கு ஏற்ப திருமண நடைமுறைகளை திட்டமிட்டு செயல்படுத்தினோம். அதுவே பசுமை திருமணத்திற்கு அடிப்படையாகவும் அமைந்துவிட்டது.

திருமணத்திற்கு தேவைப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தேர்வு செய்வதற்கு அதிக நாட்களை செலவிட வேண்டியிருந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் இதற்கு தேவைப்பட்டது’’ என்கிறார், தீபா.

மும்பையை சேர்ந்த இவர்கள் திருமணத்திற்கு அழைப்பிதழ் அச்சடிப்பதை தவிர்த்து நேரில் சென்று அழைத் திருக்கிறார்கள். இணையத்தில் திருமண அழைப்பிதழை தயாரித்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பி இருக்கிறார்கள். பயன்படுத்தப்பட்ட மறுசுழற்சி பொருட்களை நேர்த்தியாக்கி திருமண அலங்காரத்திற்கு பயன்படுத்தி இருக் கிறார்கள். திருமண விருந்தில் ஆறு வகையான உணவு வகைகளை பரிமாறி இருக்கிறார்கள். அவை அந்த சீசனில் விளைவிக்கப்பட்டவை.

‘‘நண்பர்கள் தங்கள் வீடுகளில் கிடந்த பழைய பொருட்களை கொண்டு வந்து அலங்காரமாக மாற்றினார்கள். ஏன் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை விளக்கி ஆங்காங்கே காகித அட்டைகளில் எழுதி வைத்தார்கள். வாசலில் வைக்கப்பட்ட வரவேற்பு பலகையை தாங்கி நின்ற பெரிய அட்டையை ஒரு நண்பர் வீட்டில் இருந்து கொண்டு வந்தார். அது அவர் வீட்டிற்கு டி.வி. வாங்கி வந்தபோது எடுத்து வந்த அட்டை. அதில் எங்கள் பெயரை பதித்து அலங்கரித்தது பலரையும் கவர்ந்தது’’ என்கிறார், தீபா.

மேலும் செய்திகள்