நாட்டு குதிரைகளின் நாயகன்
அழிவின் விளிம்புநிலையில் உள்ள நாட்டுக்குதிரை இனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், 37 வயது பாலசுப்ரமணியன்.;
தனியார் வங்கியின் கிளை மேலாளரான இவர், விவசாயத்திலும் ஆர்வம்காட்டி வருகிறார். பாலசுப்ரமணியன் திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர். இவர் பணியில் இருந்தபோது திருமணம் நடந்திருக்கிறது. திடீரென்று பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதனால் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் இவருக்கு வேலைகிடைத்துவிட்டாலும், சுயமாக வாழ்க்கைக்கு வழிதேடவேண்டும் என்ற எண்ணத்தில் விவசாயத்திலும் ஈடுபட்டிருக்கிறார். அதுவே பின்பு நாட்டு இன குதிரைகள் மீதான ஆர்வத்தையும், அது தொடர்பான தேடலையும் உருவாக்கியிருக்கிறது.
“நான் விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் நாட்டு குதிரைகளின் மீது, எனக்கு ஆர்வத்தை ஏற் படுத்தினார். ஆசையோடு ஒரு குதிரையை வாங்கி வளர்த்தேன். சரியாக வளர்க்கத் தெரியாததால் அந்த குதிரை திடீரென்று இறந்துபோனது. அதன் பின்பு குதிரைகளை எப்படி வளர்க்க வேண்டும்? அதற்கான உணவு முறைகள் என்ன? குதிரைகள் மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி? என்பது பற்றியெல்லாம் முழுமையாக தெரிந்து கொண்டேன். அப்போதுதான் நாட்டு குதிரை களின் மகத்துவம் முழுமையாக தெரிந்தது. அந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதால் அதனை மீட்கும் பணியிலும் ஈடுபட்டேன்.
நாங்கள் எங்கள் வீட்டில் நாட்டு இன குதிரைகள் ஐந்தினை செல்லமாக வளர்த்து வருகிறோம். நான் பேசினால் அவை பதிலுக்கு காலை தரையில் உரசும். வாலை லேசாக ஆட்டிக் கொள்ளும். லேசாக கனைத்து தலையை அசைக்கும். நாம் என்ன சொல்கிறோம் என்பதை குதிரை நன்றாக புரிந்து கொண்டு அதற்கேற்ப உடல்மொழியில் பதிலளிக்கும். அதேபோல் குதிரை களுக்கு உணவு வைக்கும்போதோ, அதை சாரட் வண்டியில் பூட்டும்போதோ நாம் பேசினால் அது மிகுந்த உற்சாகமாக துள்ளிக்குதித்தபடி நமக்கு ஒத்துழைப்புதரும்.
அதற்கு உணவு தேவை என்றால் கனைக்கும். கட்டிப் போட்ட இடத்தில் சுற்றிசுற்றி வரும். அதனுடன் ‘வாடா, போடா’ என்று செல்லமாக பேசினால் மகிழும். பேச்சை நிறுத்திவிட்டால் அது நம்மை உரசிக்கொண்டே பேசச்சொல்லும். அதனால் நான் குதிரைகளுடன் பேசிக்கொண்டே இருப்பேன். என்னிடம் மட்டுமல்ல, எனது மனைவி, பிள்ளைகளிடமும் குதிரைகள் நன்றாக பழகும். புதிய நபர்களை கண்டால் குதிரைகள் வெறித்துப்பார்த்தபடி லேசாக மிரளும். ஆனால் எதுவும் செய்யாது. அதேபோல் 5 குதிரைகளில் சிலவற்றை எங்காவது அழைத்துச்செல்லும்போது கட்டிப்போடப்பட்டிருக்கும் மற்ற குதிரைகள் பிரிவை தாங்க முடியாமல் கால்களை தரையில் பறித்துக் கொள்ளும். அழைத்துச் செல்லப்பட்ட குதிரைகள் மீண்டும் வீட்டுக்கு வந்ததும் இவைகளும் உற்சாகம்கொள்ளும்.
என்னை போன்று நாட்டுகுதிரைகள் மீது ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து ஒரு வாட்ஸ்-அப் குரூப் உருவாக்கினேன். “நாட்டின குதிரைகளை காப்போம்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட அந்த குரூப் மூலம் தமிழகத்தில் குதிரைகள் வளர்ப்பவர்களை ஒன்றிணைத்தேன்.
நாட்டு குதிரைகளில் போனி, நடு, கரிச்சான், கட்டியவாடி, மார்வார் போன்ற வகைகள் உள்ளன. போனி குதிரை 4 அடி உயரம் வரையும், நடுகுதிரை 5 அடி உயரம் வரையும் வளரும். குதிரையின் உயரம் குறைவாக இருந்தால் ஓட்டத் திறன் அதிகமாக இருக்கும். அதனை நாள் ஒன்றுக்கு 50 கிலோ மீட்டருக்கு மேல் பயன் படுத்தக்கூடாது. இந்த குதிரைகள் மணிக்கு 20 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். சிலர் 80 கிலோ மீட்டர் வேகத்தில் கூட குதிரையை ஓட்டிச் செல் கிறார்கள். அது சரியல்ல..” என்று பாலசுப்ர மணியன் சொல்கிறார்.
நாட்டு குதிரைகளை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் அவர் குறிப் பிடுகிறார்..
“நடுகுதிரை இனத்தைதான் பெரும்பாலும் பந்தயத்திற்கு பயன்படுத்துவார்கள். நான் பாண்டி என்ற குதிரையை பந்தயத்திற்கு பயன்படுத்துகிறேன். அதில் நானும் தனியாக சவாரிசெய்வேன். சாரட் வண்டியில் அதனை பூட்டி, குடும்பத்தினரையும் ஏற்றிச்செல்வேன். விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்வேன். குதிரைக்கு தினமும் ஒரு கிலோ கொள்ளு அவித்து வைக்க வேண்டும். இதேபோல் கம்பு, சோளம், பச்சரிசி, சிவப்பு அவல், கருப்பு அவுனி அரிசி, சம்பா கோதுமை, சூரியகாந்தி விதை மற்றும் கொள்ளு உள்ளிட்டவைகளை ஒன்றாக சேர்த்து மதியம் 250 கிராம் கொடுக்க வேண்டும். இதுமட்டுமின்றி குதிரையை வழக்கம்போல் மேய்ச்சலுக்கும் விட வேண்டும்.
நாள் ஒன்றுக்கு ஒரு முறைக்கு 5 லிட்டர் வீதம் காலை, மதியம், மாலை, இரவு என 4 முறை தண்ணீர் வைக்க வேண்டும். வெயில் காலத்தில் மதிய நேரத்தில் 10 லிட்டர் வரையில் குதிரை நீர் பருகும். அதனை எங்காவது ஓட்டிச்சென்று வந்த உடன் தண்ணீர் வைக்கக்கூடாது. 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தான் தண்ணீர் வைக்க வேண்டும். பந்தயத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்றால் ஓட்ட பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்றவைகளும் கொடுக்கவேண்டும்.
ஒரு குதிரைக்கு தினமும் 150 ரூபாய் வரை உணவுக்காக செலவிடவேண்டியதிருக்கும். ஆனாலும் குதிரைகள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும். அவைகளை வெளி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவரும்படி கூறுவார்கள். அதன் மூலம் ரூ.2,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். என்னிடம் 2 பேர் செல்லும் வகையிலும், 7 பேர் கொண்ட குடும்பத்தினர் செல்லும் வகையிலும் சாரட் வண்டி உள்ளது. ஒரு குதிரை இழுத்துச் செல்லும் வகையிலும் சாரட் வண்டியை அமைத்துள்ளேன். சிறிய சாரட் வண்டியை தயார்செய்ய 15 ஆயிரம் ரூபாயும், பெரிய சாரட் வண்டி என்றால் 50 ஆயிரம் ரூபாயும் செலவாகும். நாங்கள் குடும்பத்தோடு வெளிநிகழ்ச்சிகளுக்கு சாரட் வண்டியில்தான் பயணிப்போம்.
விவசாய பணிகள் அனைத்திற்கும் குதிரைகளை பயன்படு்த்தலாம். ஒரு குதிரை 1000 கிலோ வரையிலான எடையை இழுக்கும் வல்லமைகொண்டது. குதிரைகளை நாம் பயணத்திற்கு பயன்படுத்தினால், வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும். நமது வாழ்க்கையும் ஆரோக்கியமாக, இயற்கையாக அமையும். மேலும் குதிரையை ஓட்டிச்செல்வது நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நமது தனித்திறன் மேலோங்கும். ஆளுமைத்தன்மையும் மேம்படும்.
இன்று ஒரு மோட்டார் சைக்கிள் வாங்க ரூ.75 ஆயிரம் வேண்டும். மேலும் காப்பீடு தொகை செலுத்த வேண்டும். அதற்கு எரிபொருள் நிரப்ப வேண்டும். ஆனால் அந்த தொகையை குதிரைக்கு செலவிட்டால் அதனை மேலும் பல தேவைகளுக்கு பயன்படுத்திடலாம். எனது பிள்ளைகள் தினமும் குதிரையில்தான் பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு குதிரை சவாரி பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறேன். நாட்டு குதிரைகளின் பயன்பாட்டை அதிகரித்து, பலரும் அதனை பயன்படுத்தும் சூழலை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம்” என்கிறார்.
பாலசுப்ரமணியன் தனது வீட்டில் நாட்டு இன மாடுகள், கோழிகள், பூனை, நாய் போன்றவைகளையும் வளர்த்து வருகிறார். இவர் சமூக பணிக்கான முதுநிலை கல்வியை பயின்றுள்ளார். பட்டதாரியான இவருடைய மனைவி எழிலரசி வீட்டிலேயே கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கிறார். இவரும் குதிரை சவாரி மேற்கொள்கிறார். இந்த தம்பதிக்கு தவஸ்ரீ (7) என்ற மகளும், சுவாமிநாதன் (4) என்ற மகனும் உள்ளனர்.