கொரோனா வைரஸ் தொற்று பாதித்த இளம் அமெரிக்கர்களுக்கு எமனாக மாறுகிறது, உடல்பருமன்
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் ஆதிக்கம் பெருகிக்கொண்டே செல்கிறது.;
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் ஆதிக்கம் பெருகிக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு படை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நேற்று மதிய நிலவரப்படி அந்த நாட்டில் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 68 ஆயிரத்தை எட்டியது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1¼ லட்சத்தை தாண்டி விட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவின் 16 மாகாணங்கள் இப்போது தொற்று பாதிப்பால் தத்தளித்து வருவதாக அந்த நாட்டின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பாசி கூறி இருக்கிறார்.
வளர்ந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேரிட்டுள்ள இறப்புகளில் 60 சதவீதம், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் பங்களிப்பாக உள்ளது.
ஆனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் பங்களிப்பு பாதிக்கும் குறைவாகத்தான் இருக்கிறது.
அங்கு 40 60 வயதுகளில் உள்ளவர்களின் இறப்புவீதம்தான் அதிகமாக இருப்பதாக சி.டி.சி. என்று அழைக்கப்படுகிற நோய் கட்டுப்பாட்டு மையங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் காட்டுகிறது.
அமெரிக்காவில் மட்டும் இளம் வயதினர் இறப்புவீதம் அதிகமாக இருப்பதின் பின்னணியை இங்கிலாந்து பத்திரிகை ‘தி இகனாமிஸ்ட்’ சுட்டிக்காட்டுகிறது. உடல்பருமன்தான், அமெரிக்காவில் கொரோனா பாதித்த இளம் வயதினரின் உயிரை பறிக்கும் எமனாக மாறி வருவதாக அந்தப் பத்திரிகை கூறுகிறது.
ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க இளம்வயதினர்தான் குறைவான ஆரோக்கியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள், அதற்கு காரணம் அவர்கள் உடல்பருமன் பிரச்சினைக்கு ஆளாவதுதான் என்று அந்த பத்திரிகை விளக்குகிறது.
ஐரோப்பாவை காட்டிலும் அமெரிக்காவில் இளம் வயது மக்கள்தொகை அதிகமாக இருப்பதையும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டி உள்ளது. இப்படி என்னதான காரணங்கள் கூறப்பட்டாலும், அமெரிக்காவில் உயிர்ப்பலிகள் பெருகி வருவது அந்த நாட்டு மக்களை தீராத சோகத்தில் ஒவ்வொரு நாளும் ஆழ்த்தி வருகிறது.
இதற்கிடையே ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்துகிற உயிரிழப்புகளால் மக்கள் தங்கள் எத்தனை ஆண்டு வாழ்வை இழக்கிறார்கள் என ஆராய்ந்து உள்ளனர். அதன்படி இத்தாலியில் 50, 60, 70 வயதினர் மரணம் அடைகிறபோது, முறையே 30, 21 மற்றும் 12 ஆண்டுகள் உயிர்வாழ்வதை இழக்கிறார்களாம். 80 வயதுகளில் இறக்கிறவர்கள் சராசரியாக 5 ஆண்டு வாழ்வை இழக்கிறார்கள் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.