ஜம்மு-காஷ்மீரில் நடந்த ‘ரக்‌ஷா பந்தன்’

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்த கொண்டாட்டத்தைக் காண்பது அரிது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சில இளம்பெண்கள் இந்த ஆண்டு காஷ்மீர் எல்லைப் பகுதிக்கு சென்று ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடி இருக்கிறார்கள்.;

Update:2021-08-29 21:50 IST
மச்சால், புஷ்வாரி, கட்வார் மற்றும் தப்பால் ஆகிய கிராமங்களில் கடந்த 19 முதல் 22-ந் தேதி வரை கோலாகலமாக கொண்டாடி தீர்த்துவிட்டனர். இந்தக் கொண்டாட்டத்தை மச்சால் பள்ளத்தாக்கில் உள்ள இந்திய ராணுவத்துடன் இணைந்து அவர்கள் நடத்தினர். கவுரி கினிகர் மற்றும் அவரது சகாக்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்காக ஏற்கனவே சமூக ஊடகங்கள் வழியே நிதி வசூலித்தனர். இதுவரை நடந்திராத அளவுக்கு ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் சில மாதங்களுக்கு முன்பே இந்தப் பெண்கள் பணியாற்றத் தொடங்கினர். இந்தப் பெண்களுக்கு மகாராஷ்டிராவிலிருந்து மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருந்து நிதியை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

மச்சால் கிராமத்தில் நடந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில் உள்ளூர் பிரபலங்கள், ராணுவ அதிகாரிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். மேலும், ராணுவ வீரர்களும், ஏராளமான உள்ளூர் இளைஞர்களும் கலந்து கொண்டனர். இது குறித்து கவுரி கினிகர், “நம் நாட்டை பற்றி காஷ்மீர் சகோதரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த மாபெரும் தேசத்தில் அவர்களும் ஓர் அங்கம் என்பதை உணர்த்துவதே இந்த கொண்டாட்டத்தின் நோக்கம்” என்றார். இது குறித்து ராணுவ வீரர் ஒருவர் கூறுகையில், “வீட்டில் ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தை சிறப்பாகக் கொண்டாடுவோம். இப்போது என் சகோதரிகள் நினைவு வந்துவிட்டது. எனினும், புனேயிலிருந்து எங்களுக்கு ராக்கி கட்ட வந்திருக்கும் இளம் சகோதரிகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் என் கையில் ராக்கி கட்டும்போது, என் சகோதரிகள் கட்டுவது போன்று உணர்ந்தேன்” என்றார்.

காஷ்மீரின் மச்சால், புஷ்வாரி, கட்வார் மற்றும் தப்பால் கிராமப் பெண்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். முதல் முறையாக இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்பது எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது என்றனர் காஷ்மீர் பெண்கள். கொண்டாட்டத்துக்கு பிறகு, புனே பெண்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்து தேநீர் கொடுத்து மச்சால் கிராம மக்கள் உபசரித்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்