துணிச்சலான பைக் பயணி
அண்மைக் காலமாக பைக் டிராவலர்கள் இடையே லடாக் பயண ஆர்வம் அதிகரித்து வருகிறது. யூ-டியூபர் பலரும் லடாக் பயண அனுபவத்தை தங்கள் யூடியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்து கவனம் ஈர்க்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அதே லடாக் பயணம் மூலம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றிருக்கிறார் தீபா மோகன்.;
42 வயதாகும் இவர் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இதற்கிடையே, பைக் சவாரி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அவ்வாறு அண்மையில் மேற்கொண்ட பயணம்தான் லடாக். கேரளாவில் இருந்து பைக்கில் புறப்பட்டவர் உலகின் உயரமான சாலை அமைக்கப்பட்டிருக்கும் லடாக் பகுதிக்கு சென்றிருக்கிறார். ஒரு பெண்ணாக இந்த சாகச பயணத்தை மேற்கொண்டிருப்பதால் பலரும் வியப்படைந்துள்ளனர்.
பெண்கள் பைக் சவாரி மீது ஆர்வம் செலுத்தாத நிலை நிலவி வந்தது. தற்போது அந்த நிலை மாறிவருகிறது. அபாயம் நிறைந்த சாகசப் பயணங்களை தைரியத்துடன் பெண்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். அவர்களில் தீபா மோகனும் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் 24 பேர் கொண்ட குழுவினருடன் லடாக் பயணம் தொடங்கி இருக்கிறது. இதில் தீபா மோகன் உள்ளிட்ட ஐந்து பெண்கள் அடங்குவர். மொத்தம் 7,383 கிலோ மீட்டர் தூரப் பயணம். காசர்கோடு, அகமதாபாத், ஜெய்ப்பூர், பஞ்சாப், ஸ்ரீநகர், உதய்பூர் வழியாக லடாக்கை பயணக் குழுவினர் அடைந்தனர்.
பின்பு மணாலி, சண்டிகர், டெல்லி வழியாக கேரளாவை அடைந்தனர். தினந்தோறும் 250 முதல் 300 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக வைத்து பயணித்த தீபா மோகன் குழுவினர், கடல் மட்டத்திலிருந்து 18,600 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமானதாக விளங்கும் லே பாங்காங் ஏரி சாலையில் பயணித்து சாதித்துவிட்டனர்.