அழகான விசித்திரமான கடற்கரைகள்
கடலின் அழகையும், ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசையையும் ரசிக்காதவர்கள் எவருமில்லை. வசீகரிக்கும் அழகு பின்னணியுடன் காட்சி அளிக்கும் கடற்கரைகள் ஏராளம் உள்ளன.;
அவற்றுள் இயற்கையை ரசிப்பவர்களுக்கும், மகிழ்ச்சியாக பொழுதை போக்க விரும்புபவர்களுக்கும் விருந்து படைக்கும் விசித்திரமான சில கடற்கரைகளை பற்றிய தொகுப்பு இது.
வைட்ஹேவன் கடற்கரை
ஆஸ்திரேலியாவின் விட்சுண்டே தீவுகளில் அமைந்துள்ள இந்த கடற்கரையின் தோற்றமே வியப்பில் ஆழ்த்தி விடும். சுமார் ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற் கரையை வெள்ளை மணல் மற்றும் டர்க்கைஸ் நீர் சூழ்ந்திருக்கும்.
அவை இரண்டும் ஒரு சேர கலந்து மிளிரும் அழகு பிரமிக்க வைத்துவிடும். விட்சுண்டே தீவுகளில் அமைந்திருக்கும் இந்த கடற்கரைக்கு செல்ல சாலைகள் கிடையாது. படகு, கடல் விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் பயணிக்க வேண்டியிருக்கும்.
ராதாநகர் கடற்கரை
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு அங்கமான ஹேவ்லாக் தீவில் அமைந்துள்ள ராதாநகர் கடற்கரை சுற்றுச்சூழல் அம்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றது. இங்கு ஆமைகள், டால்பின்கள் சுதந்திரமாக உலவும். யானைகளையும் எப்போதாவது பார்க்கலாம்.
ஹைடன் கடற்கரை
மெக்சிகோவின் வட கிழக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள மரியேட்டா தீவு கூட்டத்தில் அமைந்துள்ள இந்த கடற்கரை பிளாயா டெல் அமோர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவுக்கு படகில் செல்லலாம். இந்த கடற்கரைக்கு செல்வதே திகில் பயண அனுபவத்தை கொடுக்கும்.
கடலுக்குள் சுரங்கப்பாதை வழியே பயணிக்கும் அனுபவத்தை பெற்றுத்தரும். அதனை கடந்து சென்றால் குகைக்கு நடுவில் கடற்கரை அமைந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
செவன் மைல் கடற்கரை
கரீபியன் தீபகற்பத்தின் கிராண்ட் கேமன் தீவுகளில் அமைந்துள்ள செவன் மைல் கடற்கரையில் பவள மணல் துகள்கள் பரவியிருக்கும். கரீபியன் தீவுகளில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்வையிடுவதற்கு சிறந்த கடற்கரையாக இது விளங்குகிறது. சூரிய கதிர்வீச்சுகள் கடல் பகுதி மட்டுமின்றி மணல் பகுதிகளிலும் பிரதிபலிக்கும். அப்போது நிலவும் காலநிலை வேற்று கிரகத்தில் வசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
பன்றி கடற்கரை
கரீபியன் தீபகற்ப நாடான பஹாமாஸில் உள்ள எக்சுமாஸ் தீவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இங்கு மனிதர்கள் வசிக்காவிட்டாலும் சுற்றுலா தேசமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை பன்றிகள்தான் வரவேற்கின்றன.
அவை கடல் நீரில் நீந்தியும், கடற்கரை மணல் பரப்பில் உலவியும் சுற்றுலா பயணிகளுடன் நெருக்கமாக பழகுகின்றன. அதனால் சுற்றுலா பயணிகள் பலரும் பன்றிகளுடன் தங்கள் நேரத்தை உற்சாகமாக செலவிடுகிறார்கள்.