டெங்கு - கொரோனா: அறிகுறிகள், வேறுபாடுகள்

டெங்கு காய்ச்சல் தானா? இல்லை கொரோனா நோய்த்தொற்றா என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு இரண்டுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.

Update: 2023-02-07 14:46 GMT

குளிர்காலம் முடிவடைய இருக்கும் சூழலில் பருவ கால நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளது. அது டெங்கு காய்ச்சல் தானா? இல்லை கொரோனா நோய்த்தொற்றா என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு இரண்டுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றை துல்லியமாக கண்டறிந்தால்தான் குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சையை சிரமமின்றி மேற்கொள்ள முடியும். அதற்கு ஏதுவாக டெங்கு, கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், அறிகுறிகள், அவை தோன்றுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

டெங்கு காய்ச்சல்:

டெங்கு என்பது ஏடிஸ் எனப்படும் கொசுக்களால் பரவும் தொற்று நோயாகும். தலைவலி, மூட்டுவலி, சருமத்தில் வீக்கம், தடிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஏடிஸ் கொசுக்கள் பொதுவாக நகர்ப்புற பகுதிகளில் அதிகம் உலவுகின்றன. அதற்கு ஏற்ப டயர்கள், காலி பாத்திரங்கள் உள்பட தேங்கி நிற்கும் நீர் பரப்புகள் அவை இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்றவையாக அமைந்திருக்கின்றன.

அறிகுறிகள்

ஒரு நபரை கொசு கடித்த 3 முதல் 14 நாட்களுக்குப் பிறகு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட தொடங்கும். காய்ச்சல், தலைவலி, கண்களுக்கு அடிப்பகுதியில் வலி, தசை மற்றும் மூட்டு பகுதிகளில் கடுமையான வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாகும். கடும் சோர்வு, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். காய்ச்சல் ஏற்பட்ட இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குள் சருமத்தில் வீக்கம், தடிப்பு உண்டாகக்கூடும். சருமம் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வரக்கூடும். மலத்திலும் ரத்தம் வெளிப்படும். பெண்களுக்கு மாதவிடாய் சமயமாக இருந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் பொதுவாக மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். அதன் பிறகு காய்ச்சலின் தன்மை மாறுபடும். சிலருக்கு டெங்குவின் வீரியம் கடுமையாகும். சிலருக்கு குறையத் தொடங்கிவிடும்.

சிகிச்சை முறைகள்

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை பொறுத்தே சிகிச்சை முறைகளும் அமையும். அதிக வீரியம் இல்லாதபட்சத்தில் ஊசி, மருந்து போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம். அடிக்கடி ரத்த பரிசோதனை செய்வதன் மூலம் நோயின் தன்மை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் டெங்கு காய்ச்சல் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளலாம்.

கொரோனா

இது ஒருவகை தொற்று நோயாகும். சளி, இருமல், தும்மல் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் போன்றவை கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும். முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றின் மூலம் நோய் பாதிப்பில் இருந்து விலகி இருக்கலாம்.

டெங்கு - கொரோனா

ஒற்றுமைகள்:

கொரோனா, டெங்கு ஆகிய இரண்டும் திடீரென அதிக காய்ச்சல் மற்றும் உடல்வலியை ஏற்படுத்தக்கூடியவை. இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் ஆரம்ப நிலையில் அதாவது, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவருக்கு என்ன நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிவது கடினம். அதன் பிறகே அறிகுறிகளைக் கொண்டு கண்டறிய முடியும். இரண்டுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், கொரோனா ஒருவகை சுவாச நோய். இருமல், சளி, மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற சுவாசத்துடன் தொடர்புடைய அறிகுறிகளை கொண்டிருக்கும். டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கடுமையான உடல்வலி, தலைவலி மற்றும் காதுகளுக்குப் பின்னால் வலி போன்றவை இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்