ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது - கஞ்சா விற்கும் போட்டியால் கொன்றது அம்பலம்

சென்னை திருவல்லிக்கேணியில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்கும் போட்டியால் கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-08-18 01:57 GMT

சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் 3-வது தெருவில் வசித்து வந்தவர் ராஜா என்ற ஆட்டோ ராஜா (வயது 49). நேற்று முன்தினம் மதியம், தான் நடத்தி வந்த டிபன் கடையில் இருந்தபோது, முககவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ராஜா, மாட்டாங்குப்பத்தில் பிரபல ரவுடிகளான வினோத், பாலாஜி ஆகியோரின் தாய்மாமன் ஆவார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் ஜாம்பஜார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் குறித்து ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ராஜாவை கொலை செய்த ரவுடிகள் சூர்யா, அவரது சகோதரர் தேவா, வைத்தியநாதன், விக்னேஷ், பாண்டியன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ராஜாவின் மருமகன்களில் ஒருவரான வினோத் தற்போது சிறையில் உள்ளார். அதனால், அவர் செய்து வந்த கஞ்சா விற்பனையை அவரது தாய்மாமனான ராஜா செய்து வந்தார். அப்போது ஏற்பட்ட தொழில் போட்டியால், சூர்யா தரப்பினர் ராஜாவை கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்