சென்னையில் ஊட்டி, கொடைக்கானலை மிஞ்சும் குளிர்..காரணம் என்ன?

தினமும் கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் சூரியனை திட்டித் தீர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்ட சென்னை வாசிகள், குளிரை தாங்க முடியாமல் வெளிய வந்துருய்யா'' உன்னை பார்த்து 2 நாள் ஆச்சியா. என சூரியனிடம் கெஞ்சி வருகின்றனர்.;

Update:2026-01-11 20:28 IST

சென்னை,

கடந்த 7 ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் முல்லைத்தீவிற்கு அருகே நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது.

இது மேலும், மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து, வடக்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது மேலும், வலுவிழந்து தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.

இதன் காரணமாகவும், தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. சென்னையிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதேபோல் குளிரும் சென்னையில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.

சென்னையில் இன்று, நேற்றில் இருந்து வானிலை நிலவரம் தலை கீழாக மாறியுள்ளது. ஏதோ ஊட்டி,கொடைக்கானலுக்கு வந்துவிட்டோமோ என நினைக்கும் அளவிற்கு குளிர் காணப்படுகிறது. அவ்வப்போது லேசான சாரல் மற்றும் ஜில் ஜில் கிளைமேட் நிலவுகிறது. ஃபேன் போடாமல் இருக்க மாட்டேன் என சொல்பவர்களை கூட பேனை ஆஃப் செய்யும் அளவுக்கு குளிர் நிலவி வருகிறது.சென்னை அதன் புறநகர்பகுதிகளில் நேற்றும், இன்றும் வெயில் வராமல், ஜில்லென குளிரும் நிலை உள்ளது. தலைநகர் சென்னை, ஊட்டி, கொடைக்கானல் போல் குளிருகிறது. காலையில் மட்டுமல்ல, பிற்பகலிலும் குளிர் குளிராகத்தான் நீடிக்கிறது. தினமும் கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் சூரியனை திட்டித் தீர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்ட சென்னை வாசிகள், இன்று குளிரை தாங்க முடியாமல்''நாங்க திட்டினதை மனசுல வச்சிக்கிடாதய்யா.. வெளிய வந்துருய்யா'' உன்னை பார்த்து 2 நாள் ஆச்சியா..எங்கய்யா போன என சூரியனிடம் கெஞ்சி வருகின்றனர்.

நாம இருப்பது சென்னை தானா? இல்லை வழிதவறி ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானலுக்கு வந்துவிட்டோமா' என சென்னைவாசிகள் பேசும் அளவுக்கு சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆக்கி விட்டது. மலைப்பிரதேசங்களில் குளிரை சமாளிக்க வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் தலை குல்லா, மப்ளர் ஆகியவற்றை அணிந்து செல்வதை பார்த்திருக்கலாம். அதே போல் நேற்றும்,இன்றும் சென்னையிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் குளிரை தாங்க முடியாமல் மப்ளர் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது. குளிரை சமாளிக்க முடியாமல் வீடுகளில் மக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்கின்றனர் .

'என்னய்யா பெரிய ஊட்டி, கொடைக்கானல், இங்க வந்து பாருங்க‌' என சென்னைவாசிகள் சிலர் தலையில் குல்லா அணிந்து கொண்டு குளிரில் நடுக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை மட்டுமல்ல, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல வடமாவட்டங்களிலும் அதீத குளிர் நிலவி வருகிறது. திருச்சி, சேலம் என வெயிலுக்கு பெயர்போன பல இடங்களிலும் இன்று கடுமையான குளிர் வாட்டி வருகிறது. பொதுவாக இருக்கும் வெப்பநிலையை விட சுமார் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக பல இடங்களில் இருக்கிறது. இன்று மட்டுமல்ல, மேலும் சில தினங்களுக்கு இதே வானிலைதான். பொங்கல் முதல் வறண்ட வானிலை இருக்குமாம். இலங்கை அருகே உருவான காற்றழுத்தம் வலுவிழுந்ததாலும் அதன் தாக்கம் பெரிய அளவில் குளிராக காணப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் தூறல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த மழையால் குளிர் நடுங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. நாளையும் இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை அடர்ந்த மேகங்கள் அருகிலேயே உள்ளன. அவை நகர்ந்து உள்ளே வரும் போதும், துறல் பெய்யும். இந்த நிலைதான் நாளை வரையிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக டெல்டாவில் கனமழை இல்லை. இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. திங்கள் கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தமிழகத்தின் உள்பகுதிகளிலும் கொங்கு மண்டல பகுதிகளுக்கும் மழை பெய்யும். புதன்கிழமை முதல் மழை இருக்காது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்