லாரி மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
திருச்செங்கோடு அருகே லாரி மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;
எலச்சிபாளையம்
கல்லூரி மாணவர்கள்
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி குட்டைத்தெருவை சேர்ந்த டீக்கடை சண்முகம் என்பவரது மகன் பூபேஷ் (வயது 19). சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கூலித்தொழிலாளி தேவராஜ் என்பவரது மகன் கிருஷ்ணா (20). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பயாலஜி 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பூபேஷ் தனது மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோட்டில் இருந்து கல்லூரிக்கு செல்ல முடிவு செய்தனர்.
கிருஷ்ணன் பின்னால் உட்கார்ந்துகொண்டும், பூபேஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். திருச்செங்கோடு அருகே பால்மடை என்ற பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களது முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பூபேஷ், கிருஷ்ணன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவர்கள் 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் பலி
இதில் பூபேஷ் திருச்செங்கோட்டில் இருந்து கோவையில் உள்ள ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிாிழந்தார். இதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோடு அருகே லாரி மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.