கிறிஸ்துவ மக்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்
மதவெறிச்செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்;
சென்னை,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் உள்ளிட்ட வடமாநிலப்பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, கிறித்துவ மக்கள் மீது இந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட கோரத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
உலகம் முழுமைக்கும் கிறிஸ்துமஸ் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில், இந்தியப் பெருநாட்டில் கிறித்துவ மக்கள் மீது நடத்தப்பட்ட இக்கொடுந்தாக்குதல் உலகரங்கில் இந்திய நாட்டின் நன்மதிப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. என்ன செய்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம்? பிரதமர் மோடியும், உள்துறைமந்திரி அமித்ஷாவும் இதுவரை கண்டனத்தைக்கூட தெரிவிக்காது, கள்ளமௌனம் சாதிப்பதேன்? வெட்கக்கேடு!
ஒன்றியத்தில் பாஜகவானது ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இசுலாமியர்கள், கிறித்துவர்கள், ஆதித்தொல்குடிகள், பழங்குடிகள் என சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள மக்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதன் நீட்சியே, தற்போது நடந்தேறிய கோரச்சம்பவங்களாகும். இது ஒட்டுமொத்த நாட்டுக்குமான பெரும் தலைகுனிவாகும். இந்திய நாட்டின் ஒப்பற்ற மனித வளமோ, பூமிக்கடியில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளமோ, ஓங்கி உயர்ந்த மலைகளோ, குறுக்கும், நெடுக்குமாகப் பாயும் ஆறுகளோ இந்நாட்டின் பெருமிதங்கள் அல்ல; மதச்சார்பின்மையும், பன்மைத்துவமும்தான் இந்நாட்டின் உயரிய அடையாளங்கள். அதனை மொத்தமாகச் சிதைத்தழிக்கும் வகையிலான மதவெறிச்செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.
உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா என பாஜக ஆளும் மாநிலங்களில் கிறித்துவ, இசுலாமியப் பெருமக்கள் மீது தொடரும் மதவெறித்தாக்குதல்களெல்லாம் திட்டமிடப்பட்ட இனஒதுக்கல் கோட்பாட்டின் செயல்வடிவமேயாகும். அதனை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தாங்கள் விரும்பிய எந்த ஒரு மதத்தையும் பின்பற்றவும், வழிபடவும், தங்களது மதம்சார்ந்த பண்டிகைகளைக் கொண்டாடவுமான அடிப்படை உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அந்த உரிமையையே முற்றாக மறுத்து, மதவெறித்தாக்குதலை அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தும் மதவெறியர்களின் அட்டூழியங்களை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. மதவெறியர்களின் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களைத் தூண்டிவிட்டு, வேடிக்கைப் பார்க்கும் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மைச்செயல்பாடுகள் மன்னிக்கவே முடியாத படுபாதகமாகும். ‘தாங்கள் வாழ்கிற நாட்டைவிட சார்ந்திருக்கிற மதமே பெரிதென எண்ணிக்கொண்டு செயல்படத் தொடங்குவார்களேயானால் நாடு சுக்குச் சுக்காகச் சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது’ எனும் அண்ணல் அம்பேத்கரின் எச்சரிக்கையைத்தான் நாட்டையாளும் ஆட்சியாளர்களுக்கு இச்சமயத்தில் நினைவூட்டுகிறேன்.என தெரிவித்துள்ளார்.
ஆகவே, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கிறித்துவ மக்கள் மீது நிகழ்த்தப்படும் மதவெறித் தாக்குதல்களை அம்மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அதனை உறுதி செய்யவும் வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.