பாரம்பரிய நெல், அரிசி ரகங்கள் கண்காட்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய நெல், அரிசி ரகங்கள் கண்காட்சி நேற்று நடைபெற்றது.

Update: 2017-03-04 20:11 GMT

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நேற்று பாரம்பரிய நெல், அரிசி ரகங்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. அனைவரும் பாரம்பரிய அரிசி ரகங்கள், இயற்கையான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கண்காட்சி நடந்தது.

கண்காட்சியில் 100–க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. சிவப்பு அரிசியில் மாப்பிள்ளை சம்பா, சித்திரக்கார், குள்ளக்கார், சிவப்பு கவுனி உள்பட பல பாரம்பரிய அரிசி ரகங்கள் இடம்பெற்றிருந்தன. 100–க்கும் அதிகமான அரிசி ரகங்களும், நெல் வகைகளும் இடம்பெற்றிருந்தன.

மூலிகை கண்காட்சி

இவை தவிர சாமை, கம்பு, கேழ்வரகு, குதிரை வாலி உள்ளிட்ட தானியங்களின் மாவுகள், அவற்றில் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்றன.

மேலும் இயற்கையாக செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட நல்லெண்ணெய், இயற்கை உரம் போட்டு விளைவித்த அரிசி உள்ளிட்ட தானியங்களும் இருந்தன.

கண்டங்கத்திரி, தூதுவளை, சோற்றுக்கற்றாழை உள்ளிட்ட ஏராளமான மூலிகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. அருகில் அந்த மூலிகைகளின் பலன்களும் எழுதி வைக்கப்பட்டு இருந்தன.

கலைநிகழ்ச்சிகள்

கண்காட்சியையொட்டி தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. கண்காட்சியில் இருந்த இளவட்ட கல் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது. சிலர் அந்த கல்லை தூக்கிப்பார்த்தனர்.

மண்வாசனை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதனை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.மதுமதி தொடங்கிவைத்து பேசினார். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் பேசுகையில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்த அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி டீன் எஸ்.சிவநேசன், கனரா வங்கி உதவி பொதுமேலாளர் சீனிவாசன், சம்பத்குமார், அரிமா சுந்தரம் உள்பட பலர் பேசினார்கள்.

மேலும் செய்திகள்