இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது இந்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

ஐ.நா. சபையில் 22–ந் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில், இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-03-17 18:45 GMT
சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அநீதியான தீர்மானம் தாக்கல் 

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தின் 34–வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதைய கூட்டத்தொடரில் அமெரிக்கா, இங்கிலாந்து, வட அயர்லாந்து, மாசிடோனியா ஆகிய நாடுகள் மிகவும் அநீதியான தீர்மானத்தைத் தாக்கல் செய்திருக்கின்றன.

அதில் இலங்கை அரசுக்கு 2019–ம் ஆண்டு வரை மேலும் காலநீட்டிப்பு கொடுப்பது என்றும், ஏற்கனவே 2015–ம் ஆண்டு தீர்மானத்தில் உள்ள பொது நலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள் பாதுகாப்பு சட்டத் தரணிகள், அங்கீகாரம் அளிக்கப்பட்ட வழக்குத் தொடருனர்கள், புலனாய்வாளர்கள் ஆகியோர் இலங்கையின் நீதிப் பொறிமுறையில் பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகக் கூறப்பட்டு இருந்ததை இந்த புதிய வரைவுத் தீர்மானத்தில் இலங்கை அரசின் சம்மதத்துடன் என்ற ஒரு வாசகத்தை சேர்த்துள்ளார்கள்.

இதன் மூலம் இலங்கை அரசு சம்மதம் சொன்னால் மட்டுமே மேற்கொண்டு விசாரணை நடைபெறும் என்று இனப்படுகொலையை முற்றிலும் மூடி மறைத்து, ஈழத்தமிழர்களுக்கான நீதியை ஆயிரம் அடிக்குக் கீழே குழிதோண்டிப் புதைக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

மன்னிக்கமாட்டார்கள் 

இந்த சோதனையான பின்னணியில் இலங்கைக்கு 2 ஆண்டு கால அவகாசம் கொடுக்கும் தீர்மானம் ஐ.நா. சபையில் தாக்கலாகி இருக்கிறது. இதனை வரும் 22–ந் தேதி ஓட்டெடுப்புக்கு விட்டு நிறைவேற்றிட இலங்கை அரசு தீவிரமாக முனைந்துள்ளது. இந்தக் கால அவகாசம் கொடுக்கப்பட்டால் ஈழத்தமிழ் இனப்படுகொலையை எந்தத் தடயமும் இல்லாமல் சிங்கள அரசு அழித்துவிடும்.

இலங்கை அரசுக்குக் கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க வேண்டும். இதற்கு மாறாக இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு தீர்மானத்தை ஆதரித்தால், அந்தத் துரோகத்தை தமிழர்கள் மட்டுமல்ல, மனித உரிமை ஆர்வலர்கள் எவருமே மன்னிக்க மாட்டார்கள்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இதே கருத்துகள் அடங்கிய கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முற்றுகை போராட்டம் 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிங்கள அரசின் கொடுமையான அராஜகப் போக்கைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நானும் பங்கேற்கிறேன். கட்சி தொண்டர்களும், ஈழத் தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் அணி திரள அன்புடன் வேண்டுகிறேன்.

ம.தி.மு.க. தொண்டர்கள் கட்சிக் கொடிகளை ஏந்தக் கூடாது. என்னுடைய உருவப்படம் உள்ளிட்ட பிளக்ஸ்போர்டு எதுவும் வைக்கக்கூடாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்