நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் சட்டமசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வழிவகை செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமருக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2017-04-26 22:46 GMT

சென்னை,

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:–

தற்போதைய நிலை

பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் மேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் ஒதுக்கீடு வி‌ஷயத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 20–ந் தேதி உங்களுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்.

இந்த கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே தொடர்வதற்கான சட்டமசோதாக்கள், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக இந்த சட்டமசோதாக்கள் வைக்கப்பட்டுள்ளன.

முதல்–அமைச்சருக்கு வந்த கடிதம்

மத்திய சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்–அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில், மாநிலங்களின் இடஒதுக்கீட்டு கொள்கையில் நீட் என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வு தலையிடாது.

மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் கிராமப்புற, மலைவாழ், பழங்குடியின மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து மாநில அரசு மதிப்பெண்கள் வழங்கலாம். இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களில் நிபந்தனைகளை மாநில அரசு விதிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்கள்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான விளக்க கையேட்டில், மாநில அரசு அல்லது சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது பல்கலைக்கழகத்தினால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நீட் மதிப்பெண், நிர்ணயம் செய்யப்பட்ட நடைமுறை, இடஒதுக்கீடு போன்றவை கவனிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களில் தமிழக அரசின் கொள்கையை பின்பற்ற முடியாத நிலை ஏற்படக்கூடும். இது கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு தரமான மருத்துவ சேவை அளிப்பதில் பின்விளைவை ஏற்படுத்தும்.

ஜனாதிபதியின் ஒப்புதல்

எனவே, மருத்துவ மேற்படிப்பில் தற்போதுள்ள நிலையே தொடர்வதை உறுதி செய்யும் வகையில், அதில் ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இரண்டு சட்ட மசோதாக்களுக்கும் ஜனாதிபதியின் ஒப்புதலை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தும். நகர்ப்புற மாணவர்கள் பெறக்கூடிய பயிற்சிகள் போன்ற வசதிகள், கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்காததால் அவர்களுக்கு பின்னடைவு ஏற்படும்.

சட்டரீதியான தகுதி

நீதிமன்றங்களின் பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில், கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவ கல்வி, பல்கலைக்கழகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுப்பட்டியலின்படி (கன்கரண்ட் லிஸ்ட்), நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி சட்டம் இயற்றிக்கொள்ள தமிழக அரசுக்கு சட்டரீதியான தகுதி உள்ளது.

எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வழிவகை செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத்தர வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்