‘புகையிலை பழக்கத்தை நிறுத்தினால் புற்றுநோயில் இருந்து விடுபடலாம்’ மத்திய சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் தகவல்

‘புகையிலை பழக்கத்தை அடியோடு நிறுத்தினால் பலவகை புற்றுநோய்களில் இருந்து விடுபடலாம்’ என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முன்னாள் செயலாளர் டாக்டர் கேசவ் தேசிராஜ் கூறினார்.

Update: 2017-06-17 22:00 GMT
சென்னை,

புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று நடந்தது. இயக்குனர் டி.ஜி.சாகர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முன்னாள் செயலாளர் டாக்டர் கேசவ் தேசிராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

புகையிலை பழக்கத்தை நாம் அடியோடு நிறுத்தினால் பலவகை புற்றுநோய்களில் இருந்து விடுபடலாம். உலக அளவில் புகையிலை பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் புகையிலை பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே குடும்பம் மற்றும் சமூகம் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தான் புற்றுநோயை ஒழிக்க முடியும்.

புற்றுநோய் பாதித்தவர்களுக்கு ஆரம்பத்தில் பயம் ஏற்படுகிறது. அந்த பயத்தை போக்க உரிய நேரத்தில், உரிய சிகிச்சையை அளித்து அக்கறையுடன் நோயாளிகளை கவனித்துக்கொண்டால் அவர்களுக்கு ஏற்படும் பயத்தை போக்குவதுடன், நோயில் இருந்தும் முழுமையாக விடுபட முடியும்.

உலகம் முழுவதும் 14 மில்லியன் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் தினமும் புற்றுநோயாளிகளும் புதிது புதிதாக உருவாகி கொண்டே வருகின்றனர். நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் உலக அளவில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது. தன்னம்பிக்கை இருந்தால் புற்றுநோயை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்