சிறுமி ஹாசினி வன்கொடுமை, கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஜாமீன் பெற்றோர் எதிர்ப்பு

சென்னை முகலிவாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான இளைஞருக்கு ஜாமீன் வழங்கியதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2017-09-14 08:41 GMT
சென்னை:

சென்னை அருகே முகலிவாக்கத்தில் 7 வயது சிறுமி ஹாசினி, தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். காவல்துறையில் இதுபற்றி புகார் அளித்திருந்த நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு ஹாசினியின் சடலம் பாதி எரிந்த நிலையில் கண்டெக்கப்பட்டது.

போலீசார் இதுபற்றி நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து எரித்தது அதே அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். இதனால் அவரால் ஜாமீன் பெற முடியவில்லை.

குண்டர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து தஷ்வந்தின் தந்தை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், தஷ்வந்த் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்தது. இதனால் அவருக்கு எளிதில் ஜாமீன் கிடைத்தது.

இதற்கு சிறுமி ஹாசினியின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த சிறுமியின் தந்தை, தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவித்து ஜாமீன் வழங்கியது வேதனை தருவதாகவும், அவன் வெளியில் இருந்தால் மேலும் பலருக்கு ஆபத்து என்றும் கூறினார்.

குற்றவாளியின் தந்தை தன் மகனை வெளியில் கொண்டு வருவேன் என்று என்னிடம் சவால்விட்டார். அவன் வெளியில் வந்து மேலும் பலரை கொல்லவும் தயங்கமாட்டான். பாலியல் வன்கொடுமை செய்தவர்களையும் கொலை செய்தவர்களையும் வெளியில் விடவே கூடாது. என் மகள் மரண சம்பவத்தில் இருந்து என் மனைவி இன்னும் வெளியே வரவில்லை” என்றும் சிறுமியின் தந்தை தெரிவித்தார்.

இதற்கிடையே, ஹாசினி வழக்கில் அரசு உரிய மேல் நடவடிக்கை எடுக்கும் என்றும், இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்கு பாடமாக அமையும் வகையில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்