‘ஜனநாயகன்’ படம் வெளியாக வேண்டி மொட்டை அடித்த ரசிகை
விஜய் படம் வெளியாவதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயார் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.;
சென்னையை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா மதன். சிறு வயது முதலே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான இவர், தனது வலது கையில் விஜயின் புகைப்படத்தை ‘டாட்டூ’ வரைந்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகமாக மாறிய பிறகு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மகளிர் அணியில் செயல்பட்டு வருகிறார். அது முதல் தீவிர கட்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால், அந்த படம் நல்லபடியாக வெளியாக வேண்டி அனகாபுத்தூரில் உள்ள அயோத்தி அம்மன் கோவிலில் ஐஸ்வர்யா நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து அம்மனுக்கு முடி காணிக்கை செலுத்தினார்.
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறும்போது, “திரைப்படங்களில்தான் இது போன்று புரட்சி ஏற்படுத்த வேண்டும் என வருபவர்களுக்கு வில்லனாக இருக்கும் ஆளுங்கட்சியினர் தொந்தரவு கொடுப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் விஜய்க்கு அது அப்படியே நிஜத்திலும் நடக்கிறது. ‘ஜனநாயகன்’ படம் விரைவில் வெளியாக வேண்டும் என வேண்டிக்கொண்டு மொட்டை அடித்துக்கொண்டேன். விஜய் படம் வெளியாவதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயார்” என்றார்.