மத்திய அரசின் ஏகலைவா பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பு: கி.வீரமணி
ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்;
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏகலைவா பள்ளிகள் என்ற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள மலைவாழ் மாணவர்களுக்கென ஒன்றிய அரசு நடத்தும் ஏகலைவா மாடல் ரெசிடென்சியல் ஸ்கூல் (EMRS) – பள்ளிகள் தமிழ்நாட்டில் விழுப்புரம், சேலம், ஊட்டி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் செயல்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளி...தமிழுக்கு இடமில்லை!கடந்த 19.09.2025 இல் மேல்நிலைப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கான தேர்வுகள் 13.12.2025,14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. தேர்வில் பகுதி-6 இல் மொழிகளுக்கான பகுதியில் ஆங்கிலம், அசாமி, வங்காளம், போடோ, டோகிரி, கரோ, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, காசி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிசோ, நேபாளி, ஒடிசா, சந்தலி, தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றன.உள்ளூர் மொழிகள் காலிப் பணியிடங்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு, தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் மொழிப் பட்டியலில், தமிழ் இல்லாத காரணத்தால் பகுதி-6 இல் ஆங்கிலத்தையே தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய இக்கட்டான சூழல் அமைந்தது. பகுதி 6-இன் 30 மதிப்பெண்களுக்கு 12 தகுதி மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய சூழலில், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் இந்தியிலும், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் ஆங்கிலத்திலும் பதில் அளிக்க வேண்டும். அடுத்து உள்ள உள்ளூர் மொழி என்னும் பிரிவுக்கான 10 மதிப்பெண்களுக்கு என குறிக்கப்பட்டுள்ள மொழிகளில் தமிழ் இல்லாத காரணத்தால், அப் பிரிவிற்கும் ஆங்கிலத்தையே தேர்வு செய்து எழுத வேண்டிய கடுமையான நிலை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் நேர்ந்துள்ளது.40% மதிப்பெண்கள் கட்டாயமாம்!தேர்வுகள் எதிலும், இந்தியக் குடிமக்களாகப் பங்கேற்றுப் பணியில் தேர்வடைய எல்லோருக்கும் உரிமை உண்டு - தமிழர்களுக்கும் உண்டு. ஆனால், கட்டாயம் 40% மதிப்பெண்கள் எடுத்தால் தான், பிற கேள்விகளே திருத்தப்படும் என்று சொல்லப்படக் கூடிய கட்டாயமான மொழிப் பிரிவில் தமிழ் ஏன் இடம்பெறவில்லை?தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளிகள் இருக்கின்றன. அதில் பணியாற்ற மாட்டார்களா? அது குறித்த விவரம் என்ன? கடந்த சில ஆண்டுகளாகத் தமிழுக்கான ஆசிரியர்களே ஒன்றிய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் நிரப்பப்படவில்லை என்பது ஒன்றிய அரசின் வாயிலாகவே வெளிப்பட்டதே! அதே போல, ஏகலைவா பள்ளிகளில் உள்ள நிலைமை என்ன? எத்தனை இடங்கள் உள்ளன? அவற்றில் இட ஒதுக்கீட்டின் நிலை எவ்வாறு இருக்கிறது? தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நிரப்பப்படாத பணியிடங்கள் எவ்வளவு? போன்ற கேள்விகள் எழுகின்றன.இவற்றுக்கு உரிய பதில்களை ஒன்றிய அரசு தரவேண்டாமா?தேர்வில் உள்ளூர் மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதே! இது அநீதி அல்லவா?ஒரே ஆண்டில் இரு காசி தமிழ்ச் சங்கமத்தின் பின்னணி!தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி தங்கள் பிரச்சாரத்திற்காக, காசித் தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் \"சங்கிமத்\"தைத் ஒரே ஆண்டில் இரண்டு முறை நடத்திய ஒன்றிய அரசு, தமிழைப் போற்றுவதாக வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு, தமிழுக்குத் தர வேண்டிய உரிமையை மறுப்பதேன்?''தமிழுக்காகப் பேசுகிறோம், தமிழுக்காக உருகுகிறோம்'' என்றெல்லாம் நாடகமாடும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் இரட்டை வேடத்திற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?தமிழுக்கு உரிய நிதியையும் ஒதுக்காமல், தமிழர்களுக்கு உரிய வேலை வாய்ப்பையும் பறிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். போடும் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
இந்த அநீதிக்குரிய பரிகாரம் வழங்கப்படவேண்டும். இல்லையேல், தமிழ்நாடெங்கும் கிளர்ச்சியைத் தொடங்க வேண்டி இருக்கும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து குரல் எழுப்பிட வேண்டும்.தமிழ் புறக்கணிப்பை, ஹிந்தித் திணிப்பை எந்த நிலையிலும் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது. நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் களத்திலும் இப்பிரச்சினை நிச்சயம் எதிரொலிக்கும்.என்று தெரிவித்துள்ளார்.