ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

Update: 2017-11-23 00:00 GMT
சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர்கள் இருவரும் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

நீதிபதி ஆறுமுகசாமி நேற்று தனது நேரடி விசாரணையை தொடங்கினார்.

ஆணையத்தில் முதன்முதலாக பிரமாண பத்திரம் அளித்த டாக்டர் சரவணன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் ஆஜரானார்.

விசாரணை நடத்துவதற்காக ஆணையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அறையில் உள்ள கூண்டுக்குள் நின்று சரவணன் தனது தரப்பு புகாரை கூறினார். மேலும், அவர் தன்னிடம் இருந்த சில ஆவணங்களையும் நீதிபதியிடம் அளித்தார். சரவணன் ஏற்கனவே அளித்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி, டாக்டர் சரவணனிடம் பல கேள்விகள் கேட்டார். அதற்கு டாக்டர் சரவணன் பதில் அளித்தார். இந்த விசாரணை சுமார் 1 மணி நேரம் நடந்தது.

இதன்பின்பு, புகார் தொடர்பான சில ஆவணங்களை இன்று (23-ந் தேதி) தாக்கல் செய்வதாகவும், அதற்கு அனுமதிக்கும்படியும் டாக்டர் சரவணன் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதன்பின்பு ஆணையத்தில் இருந்து வெளியே வந்த டாக்டர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் இருந்தபோது குறிப்பிட்ட இடைவெளியில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை குறித்த விவரங்கள் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டது. இதுபோன்று வெளியிடப்பட்ட மருத்துவ குறிப்பிலும், ஜெயலலிதா இறந்த பின்பு வெளியிடப்பட்ட மருத்துவ குறிப்பிலும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் மறுநாள் அவர் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மோசமான நிலையில் மயக்கத்துடன் அனுமதிக்கப்பட்டிருப்பது மருத்துவ குறிப்புகள் மூலம் தெரிகிறது.

தேர்தல் ஆணையத்தில் அளித்த படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும்போது கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தால் அதில் கோடுகள் தெளிவாக இருக்கும். இறந்தபின்பு கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தால் கோடுகள் இருக்காது. ஜெயலலிதா கைரேகையை பதிவு செய்து தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணத்தில் உள்ள கைரேகையில் கோடுகள் இல்லை.

இதன்மூலம் ஜெயலலிதா கைரேகை பதிவு செய்யப்பட்ட 27.10.2016-க்கு முன்பே அவர் இறந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் கோரி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின்பு ஜெ.தீபா, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆணையத்தில் புகார் மனுக்களை அளித்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமி நேற்று ஆணையத்துக்கு வந்து தன்னையும் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் மனு அளித்தார். மேலும் அவர், தனது பிரமாண பத்திரத்தை 23-ந் தேதி(இன்று) தாக்கல் செய்வதாக கூறினார். அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

இதன்பின்பு நீதிபதி ஆறுமுகசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுவரை 12 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 75 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். சில புகார் மனுக்கள் 100-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டவையாக உள்ளன. இவை அனைத்தையும் படித்தால் தான் யார், யாரை விசாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியும். அதன்பின்பு தான் யார், யாருக்கு சம்மன் அனுப்புவது என்று முடிவு செய்வோம்.

ஜெயலலிதாவின் மரணம் நடந்தது எப்படி? என்ற உண்மையை தெரிந்து கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். 22-ந் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தபோதிலும் யாருக்கேனும் உண்மை தெரியும் என்றால் அவர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிப்பது தான் சரியாக இருக்கும். அந்த அடிப்படையில் விசாரணையின்போது யாரேனும் பிரமாண பத்திரம் அல்லது புகார் மனுக்கள் அளித்தால் அதையும் ஏற்றுக்கொள்வோம்.

2 அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளோம். அவர்கள் இன்று (23-ந் தேதி) காலை 10.30 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தி உள்ளோம். விசாரணை பாதிக்கும் என்பதால் சம்மன் அனுப்பி உள்ள அரசு மருத்துவர்கள் பற்றி தெரிவிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான டாக்டர் சரவணன் ஜெயலலிதாவின் கைரேகை குறித்த சந்தேகத்தை எழுப்பி ஜெயலலிதா மரணம் முன்கூட்டியே நடந்து இருக்கலாம் என்று கூறி இருப்பதால் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரிடம் கைரேகை பதிவு செய்த அரசு டாக்டர் பாலாஜியிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்து அதன் அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்