பிரசவகால இறப்பு விகிதம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பிரசவகால இறப்பு விகிதம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2017-12-31 20:23 GMT
சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழ்நாடு பிரிவு தணிக்கையில், மகப்பேற்றின் போது தமிழ்நாட்டில் தாய்மார்கள் இறக்கும் விகிதம் நடப்பாண்டில் நவம்பர் வரை 33 விழுக்காடும், கடந்த 5 ஆண்டுகளில் 19 விழுக்காடும் அதிகரித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மருத்துவத் தலைநகரம் என்று போற்றப்படும் சென்னையின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சென்னையில் மகப்பேற்றின் போது தாய்மார்கள் உயிரிழக்கும் விகிதம் நடப்பாண்டில் நவம்பர் வரை 21 விழுக்காடும், கடந்த 5 ஆண்டுகளில் 80 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக தேசிய சுகாதார இயக்கத்தின் தணிக்கையில் தெரியவந்திருக்கிறது.

நடப்பாண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் ஒரு லட்சம் பிரசவங்களில் 63 தாய்மார்கள் உயிரிழந்திருக்கின்றனர். சென்னையிலும், தமிழகத்திலும் தொடர்ச்சியாக தாய்மார்கள் இறப்பு விகிதம் அதிகரித்து வருவது, எந்த வகையில் விளக்கம் அளித்தாலும் ஏற்க முடியாததாகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மகப்பேற்றில் தாய்மார்கள் இறக்கும் விகிதம் குறைந்து வரும் வகையில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.

பிரசவத்தின் போது குழந்தைகளும், தாய்மார்களும் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் மத்திய சுகாதார மந்திரியாக இருந்தபோது தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைக் கொண்டு வந்தேன். 108 அவசர ஊர்தித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினேன்.

இதனால் மருத்துவமனைகளுக்கு வெளியில் குழந்தைகள் பிறப்பது முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது. இனியும் இதேபோல் இல்லாமல் மருத்துவ சேவையின் தரத்தை அதிகரித்து, இனி வரும் காலங்களில் மகப்பேற்றில் தாய்மார்கள் உயிரிழக்கும் நிகழ்வுகளை ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக குறைக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்