புத்தாண்டு கொண்டாட்டங்களில் தமிழகம் முழுவதும் 13 பேர் உயிரிழப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்பட்ட விபத்துக்களால் 13 பேர் பலியானார்கள் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். #NewYear2018 #HappyNewYear2018

Update: 2018-01-01 06:05 GMT
சென்னை

புத்தாண்டு நள்ளிரவில் பிறந்ததையொட்டி சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், கேக் வெட்டியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்றனர். 

வழக்கம்போல் இந்த ஆண்டு இளைஞர்கள் ‘ஹேப்பி நியூ இயர்’என்ற  முழக்கங்களுடன் வாகனங்களில் உற்சாகமாக சீறிப் பாய்ந்தனர். 

இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்ற 150க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு விபத்துகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையும்  மீறி  நேற்று இரவு ஒரே நாளில் சென்னையில் மட்டும் 176 இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது. அதில் காயம் அடைந்த 200 ம் மேற்பட்டவர்கள் ராஜீவ்காந்தி, ராயப்பேட்டை, ஸ்டான்லி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 82 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கபட்டு உள்ளனர். இருவர் உயிரிழந்து உள்ளனர்.

இதனிடையே, கொண்டாட்டங்களின் போது ஏற்படும் விபத்துகளில், உயிரிழப்பு நேராதவாறு சிகிச்சை வழங்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரெய்மான் (29). இவர் சென்னையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அவர் மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்றார். அப்போது கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் இரு சக்கர வாகனத்தில் ரெய்மான் திரும்பி கொண்டிருந்தார்.

எழும்பூர் லேன்ட்ஸ் கார்டன் சாலையில் அதி வேகமாக வந்த ரெய்மானின் இருசக்கர வாகனம் நடைபாதையில் மோதியது. விபத்தில் தலையில் படுகாயம் அடைந்து கேரளாவைச் சேர்ந்த ரெய்மான் (29) உயிரிழந்தார்.

இது குறித்து எழும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த இளைஞர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இது போல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட விபத்துகளில் 13 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்