பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிப்பாரா?

அடுத்த வருடம் நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிப்பாரா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-01-16 23:00 GMT
சென்னை,

அடுத்த வருடம் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வியூகங்கள் எப்படி இருக்கும் என்று இப்போதே அரசியல் நிபுணர்கள் ஆருடங்கள் கணிக்க தொடங்கி உள்ளனர்.

ரஜினிகாந்த்

பா.ஜனதாவும், காங்கிரசும் கூட்டுக்காக எந்த பக்கம் அணி தாவும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ரஜினிகாந்த் முடிவு என்னவாக இருக்கும் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. பா.ஜனதாவும், ரஜினிகாந்தும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சுக்களும் கிளம்பி இருக்கிறது.

ரஜினிகாந்த் அடுத்த சட்டமன்ற தேர்தலை குறிவைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்து இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் என்ன முடிவு எடுப்பது என்பதை தேர்தல் வரும்போது அறிவிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அவரது ஆதரவை பெறும் முயற்சிகளில் பா.ஜனதா தலைவர்கள் இறங்கி உள்ளனர்.

அரசியல் ஆலோசகர்

ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஜினிகாந்துடன் நெருக்கமான நட்பு உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் போயஸ்கார்டன் வீட்டுக்கே வந்து ரஜினிகாந்தை சந்தித்தார். ஆன்மிக அரசியலே தனது கொள்கை என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தும், பா.ஜனதாவும் இணைந்தால் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற முடியும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்து உள்ளார். இவர், ரஜினிகாந்துக்கு அரசியல் ஆலோசகராக இருப்பதாக தகவல்.

ஒரே கொள்கை

இதுகுறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியும், அரசியல் மாற்றமும் ஏற்பட வேண்டும் என்ற பா.ஜனதா கொள்கையோடு ரஜினியின் கொள்கையும் ஒத்துப்போகிறது. ஆனாலும் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது” என்றார்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவில் இருக்கும் ரஜினிகாந்த், காங்கிரஸ் அல்லது பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தே ஆகவேண்டும் என்றும், பா.ஜனதாவை ஆதரிப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன்

ரஜினிகாந்த் பா.ஜனதா பக்கம் தாவினால் தனிக்கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசன் ஆதரவை பெறுவதில் காங்கிரஸ் முனைப்பு காட்டும் என்று தெரிகிறது. 

மேலும் செய்திகள்