தமிழகத்தில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை முதல்-அமைச்சரை தொழில் அதிபர்கள் சந்திக்கலாம்

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைக்கு முதல்-அமைச்சரை எப்போது வேண்டுமானாலும் தொழிலதிபர்கள் சந்திக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2018-02-02 20:45 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தொழில்முனைவோரை ஈர்ப்பதற்கு, தமிழக அரசு மிக தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக, சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முனைவோர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலமாக 5 தொழில் முதலீடுகள் உடனடியாக தமிழகத்திற்கு கிடைத்துள்ளன.

இப்போது, தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. தொழில் தொடங்கவும், விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் அனுமதி கொடுக்கப்படுகிறது. அவ்வாறு ஒரு மாதத்திற்குள் அனுமதி கிடைக்காத பட்சத்தில், உடனடியாக முதல்-அமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கலாம். புகார் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் இடத்திற்கு கொண்டுவர முயற்சி

தொழில் தொடங்குவது சம்பந்தமாக, தொழிலதிபர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விரும்பினால், ஒரு நாளைக்கு முன்பு முதல்-அமைச்சரின் செயலாளர்களிடம் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவித்த அடுத்த நாளே, முதல்- அமைச்சரை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படும்.

தமிழகத்தில் தொழில் வளம் பெருகவேண்டும் என்ற அக்கறையோடு முதல்-அமைச்சர் இருக்கிறார். இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்திற்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது, சிறிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கும், தமிழ்நாட்டில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதிக அளவிலான நல்ல திறன் வாய்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

வெளிநாட்டினர் ஆர்வம்

நல்ல உள்கட்டமைப்பு வசதி, தொழிலாளர்கள் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, ரெயில் வசதி, துறைமுக வசதி, விமான வசதி போன்ற வசதிகள் ஒருங்கே அமைந்திருப்பதால், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வெளிநாட்டினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொழிலதிபர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க தமிழக அரசும், அதிகாரிகளும் தயாராக இருக்கிறார்கள் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்