தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது நடிகை குஷ்பு பேட்டி

தமிழகத்தை மத்திய பாரதீய ஜனதா அரசு புறக்கணிக்கிறது என நடிகை குஷ்பு தெரிவித்தார்.

Update: 2018-02-02 22:30 GMT
ஆலந்தூர், 

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை புறக்கணிக்கிறது

மத்திய பாரதீய ஜனதா அரசின் கடைசி பட்ஜெட் இது என்பது தெளிவாக தெரியும். பொதுமக்கள், விவசாயிகளை பற்றி எதுவுமே யோசிக்காமல் திடீரென முழிப்பு வந்ததுபோல மத்திய அரசு உள்ளது. இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை.

பெங்களூருவில் தேர்தல் நடக்க உள்ளதை மனதில் வைத்து பட்ஜெட்டில் திட்டம் போடப்பட்டு உள்ளது. தமிழகத்துக்கு எதுவுமில்லை. தமிழகத்துக்கு இதுவரை எந்த நல்லதும் செய்யவில்லை. தமிழகத்தை மத்திய பாரதீய ஜனதா அரசு புறக்கணிக்கிறது.

வெற்றி கிடைக்காது

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது கவலைப்படாத பிரதமர், மத்திய மந்திரிகள் தற்போது அக்கறை இருப்பதாக காட்டிக்கொண்டனர். ஆனால் பட்ஜெட்டை முழுமையாக படித்து பார்த்தால் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. மக்களுக்கு நல்ல பட்ஜெட் கிடையாது.

ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தல் முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதை தெரிந்துகொண்டதால்தான் பட்ஜெட் பற்றி யாரும் பேசக்கூடாது என்பதற்காக இடைத்தேர்தல் முடிவை அன்று புத்திசாலித்தனமாக வைத்து உள்ளனர்.

பாரதீய ஜனதா தவறான வழியில் செயல்படுகிறது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு வெற்றி கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்