குரங்கணி தீவிபத்தில் சென்னை என்ஜினீயர் உள்பட மேலும் 2 பெண்கள் சாவு

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சென்னை என்ஜினீயர் உள்பட மேலும் 2 பெண்கள் இறந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2018-03-16 23:00 GMT
மதுரை,

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்காக சென்றிருந்த குழுவினர் சிக்கினர். அவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேர் கருகி இறந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா, அனுவித்யா, ஈரோடு திவ்யா, கண்ணன், கோவை மாவட்டம் திவ்யா விஸ்வநாதன் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சக்திகலா (வயது 40), தேவி (29) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தனர். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

சக்திகலா திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர். யோகா ஆசிரியையான இவருடைய கணவர் சரவணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சக்திகலா தனது குழந்தைகள் பாவனா (12), சாதனா (11) ஆகியோருடன் மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்தார். இந்த விபத்தில் அவரது குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர்.

தேவி சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வேட்டுவப்பட்டியைச் சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். தோழிகளுடன் மலையேற்றத்துக்கு சென்றிருந்த இவர் தீவிபத்தில் சிக்கிக் கொண்டார்.

தீ விபத்தில் பலத்த காயங்களுடன் 6 பேர் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். 

மேலும் செய்திகள்