மெட்ரோ ரெயிலில் மீண்டும் டோக்கன் முறை அறிமுகம் பயணிகள் வரவேற்பு

சென்னை மெட்ரோ ரெயிலில் மீண்டும் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2018-04-23 23:30 GMT
சென்னை,

சென்னை நேரு பூங்காவில் இருந்து விமானநிலையம், ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை மற்றும் விமான நிலையம் முதல் சின்னமலை வரை சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.70-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

ரெயில் நிலையங்களில் பயணிகள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப டிக்கெட்டுகளுக்கு பதிலாக டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் பயண அட்டை (டிராவல் கார்டு) அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக டோக்கன் வழங்குவதை குறைத்துக்கொண்டு பயண அட்டை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பயண அட்டை வாங்கும்போது பயண கட்டணத்துடன் கூடுதலாக முன்பணம் ரூ.10 செலுத்த வேண்டி இருந்தது.

இந்தநிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த டோக்கன் முறை தற்போது முழுவீச்சில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தேவையான டிக்கெட் கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என்பதால் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் பயண அட்டைக்கான முன்பணம் ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அட்டையை பயணம் முடிந்தபின் தேவை என்றால் பயணிகள் வைத்துக்கொள்ளலாம். இதனை ரீசார்ஜ் செய்தும் பயன்படுத்தலாம். குடும்பத்தில் வேறு நபரும் அந்த பயண அட்டையை பயன்படுத்தலாம். தேவை இல்லை என்றால் ரெயில் நிலைய கவுண்ட்டர்களில் கொடுத்து ரூ.50 முன்பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது மெட்ரோ ரெயிலில் சராசரியாக ஒரு நாளைக்கு 23 ஆயிரம் முதல் 24 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பயணிகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்தில் இருந்து 31 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. மேலும் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

மேற்கண்ட தகவலை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்