மனைவியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி: ஜாமீனில் வந்த வாலிபர் வெறிச்செயல்

சிறைக்கு அனுப்பிய மனைவியை ஜாமீனில் வெளியே வந்து வாலிபர் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-06-14 14:37 IST

திருப்பூரில் தன்னை சிறைக்கு அனுப்பிய மனைவியை ஜாமீனில் வெளியே வந்து கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபரின் வெறிச் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் குமார் (35 வயது) என்பவருக்கும், திருப்பூர் முதலிபாளையம் வஞ்சியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (33 வயது) என்பவருக்கும், கடந்த 2015-ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அவரது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மகேஸ்வரி திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனால் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 110 நாட்களாக சிறையில் இருந்த குமார் நேற்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள மனைவியை பார்க்க சென்ற குமார் மனைவியிடம் நான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் நாம் இனி சேர்ந்து வாழலாம் என்று தெரிவித்தார். ஆனால் மகேஸ்வரி அதை ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த குமார் வீட்டில் இருந்த அருவாமனையை எடுத்து மகேஸ்வரியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வீட்டுக்குள் வருவதை பார்த்து குமார் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

உயிருக்கு போராடிய மகேஸ்வரியை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தான் மனைவியை கொன்று விட்டதாக நினைத்து பயத்தில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் குமார் சரணடைந்தார். தொடர்ந்து வடக்கு போலீசார், நல்லூர் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்