'தமிழன் ஒடிசாவை ஆள்வதா என்று கேட்டவர்கள் இன்று தமிழ் கடவுளை தொடுகிறார்கள்' - சீமான் ஆவேசம்

தீமைக்கு தீமை மாற்று அல்ல, தீமைக்கு நன்மைதான் மாற்று என்று சீமான் தெரிவித்தார்.;

Update:2025-06-14 14:48 IST

தூத்துக்குடி,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தேர்தலில் கூட்டணி என்பது எங்களுக்கு கிடையாது. நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். தீமைக்கு தீமை மாற்று அல்ல. தீமைக்கு நன்மைதான் மாற்று. தீமையை நன்மையை வைத்து ஒழிப்பேன் என்று நபிகள் நாயகம் கூறினார். அதைத்தான் இறைமகன் இயேசு கிறிஸ்துவும், பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் போதிக்கின்றனர்.

தி.மு.க. தனது ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். ஆனால் பா.ஜ.க.வை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. அதேபோல் தி.மு.க.வை ஒழிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கூறுகிறது. இவர்கள் அனைவரையும் ஒழிக்க வேண்டும் என்று கூறுவதுதான் எங்கள் அணி. நாங்கள் தனித்து நின்று மக்களுக்காக போராடுவோம்.

பா.ஜ.க.வின் முருகன் மாநாடு ஒரு மார்க்கெட்டிங். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் தேர்தலுக்கு முன்பு திறந்தார்கள். அந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளரை நிற்கவைத்து பா.ஜ.க.வை தோற்கடித்துவிட்டார். அதோடு அவர்களின் ராமர் அரசியல் தோல்வியடைந்துவிட்டது.

பூரி ஜெகன்நாதரை வைத்து ஒடிசாவிற்குள் நுழைந்தார்கள். தமிழன் ஒடிசாவை ஆள்வதா என்று கேட்டவர்கள் இன்று தமிழ் கடவுளை தொடுகிறார்கள். கேரளாவில் ஐயப்பனை தொட்டுப் பார்த்தார்கள். ஆனால் அங்கு அது எடுபடவில்லை. தமிழ்நாட்டில் சிவபெருமானை தொட்டுப்பார்த்தார்கள். அதுவும் பலனளிக்கவில்லை.

இறுதியாக தமிழர்களின் வாக்குகளை பறிக்க தமிழ் கடவுள் முருகனை தொடுகிறார்கள். எங்கள் தமிழ் கடவுளுக்கு முன்னால் அவர்களால் தமிழில் திருப்புகழ், திருமுருகாற்றுப்படை பாட முடியுமா? முருகனை போற்றிப் பாட தமிழில் எதுவும் இல்லையா? அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு இதில் ஒரு அரசியல் இருக்கிறது."

இவ்வாறு சீமான் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்