உலக செவிலியர் தினம்: சிறப்பாக சேவை புரிந்த 251 செவிலியர்களுக்கு விருது அமைச்சர் வழங்கினார்

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாக கூட்டரங்கில் உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

Update: 2018-05-11 21:45 GMT
சென்னை, 

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாக கூட்டரங்கில் உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.

இதில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் இன்பசேகரன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின்ஜோ, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்ததற்காக 251 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருதினை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

மக்களின் நல்வாழ்விற்காக இரவு பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்பணிப்பு உணர்வுடன் கூடிய செவிலியர் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கது. நவீன செவிலிய பணிகளுக்கு ஏற்றவாறு சீருடை மாற்றம் செய்யவும், 500 செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-1, 1500 செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-2 என 2 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு கூடுதலாக புதிய செவிலியர் பணியிடங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்