ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாக குளியல்

கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2018-05-13 22:00 GMT
பென்னாகரம், 

கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

கர்நாடக, தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததாலும், கோடை விடுமுறையையொட்டியும் நேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து, அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் தொங்கு பாலம், பார்வை கோபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகள் நேற்று அதிக அளவில் வந்ததால் நடைபாதை, பஸ் நிலையம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

இதனால் கடைகள், ஓட்டல்களில் மீன் உணவுகள் விற்பனை படுஜோராக நடந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்ததால் போலீசார், ஊர்காவல் படையினர், மீட்புக்குழுவினர் ஆகியோர் மெயின் அருவி மற்றும் மணல் திட்டு, கோத்திக்கல், பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவிரி ஆற்றில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கூடாது என்று அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்