‘ஸ்டெர்லைட்’ ஆலையை உடனடியாக மூட வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

‘ஸ்டெர்லைட்’ ஆலையை உடனடியாக மூட வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

Update: 2018-05-23 19:30 GMT
சென்னை, 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தூத்துக்குடியில் பெருந்துயர வன்கொடுமைகளை காவல்துறையினர் அரங்கேற்றி இருப்பது சட்டம்–ஒழுங்கை காப்பாற்றுவதற்காக தான் என்று சொன்னால் அது ஏற்க கூடியது இல்லை.

ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்கும் தூத்துக்குடியில் தமிழக அரசு நடத்தியுள்ள இந்தப் படுகொலைக்கும் என்ன வேறுபாடு? காலத்தாலும் மன்னிக்க முடியாத இக்கொடுஞ்செயலுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்–அமைச்சர் பதவி விலகுவதுதான் தற்போதைக்கு ஆறுதல் அளிப்பதாக அமையும்.

படுகொலை செய்துவிட்டு பின்னர் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவது தான் ஒரு மக்கள் அரசின் அணுகுமுறையாகுமா? உயிர்கொடுத்தேனும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் எனப் போராடிப் பலர் களப்பலி ஆகியுள்ள நிலையில், அரசு உடனடியாக அந்த ஆலையை நிலையாக மூடுவதுதான் மக்களுக்கான அரசின் நடவடிக்கையாக அமையும்.

இவ்வளவு கொடூரமான படுகொலைகளுக்குப் பின்னரும் அந்த ஆலை இயங்க அரசு அனுமதிக்குமேயானால், தமிழகத்தில் தன்னியல்பாக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும். அது காலத்தால் தவிர்க்கமுடியாதது ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்