அமெரிக்க விசாவுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா..?
உலகம் முழுவதிலும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது.;
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக வந்த வெளிநாட்டினரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார். அதன்படி, இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். அமெரிக்காவில் ஏற்கனவே குடியேறிய வெளிநாட்டினரை விரட்டி விட்டோம். இனி புதிதாக உள்ளே வருபவர்களுக்கு எப்படி தடைக்கற்கள் போடுவது என்று யோசித்து வெளிநாட்டு பணியாளர்களுக்கான எச்.1.பி. கட்டணத்தை ரூ.1.23 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தினார்.
அதனால் அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்கலாம், வாழ்வில் வளம் காணலாம் என்ற கனவில் இருந்த இந்தியா உள்பட வெளிநாட்டு சாப்ட்வேர் என்ஜினீயர்களுக்கு பெரிய இடி விழுந்தது. அமெரிக்காவில் எச்.1.பி. விசா பெறுபவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள். இதனால் இந்த உத்தரவு, இந்திய இளைஞர்களின் கனவையே சிதைத்துவிட்டது. அதற்கடுத்து, மற்றொரு சம்மட்டி அடி இப்போது விழுந்துள்ளது.
ஆண்டுதோறும் அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு அமெரிக்க தூதரகங்கள் மூலம் விசா வழங்கப்படுகிறது. ஏற்கனவே விசா கிடைப்பது பெரிய குதிரை கொம்பாக இருக்கும் நிலையில், இப்போது புதிதாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அதனை மேலும் சிக்கலாக்கிவிட்டது. அமெரிக்காவில் பிள்ளைகள் வேலை பார்த்தால், அவர்களோடு தங்கியிருந்து வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு இனி அப்படி இருக்கமுடியாது என்ற வகையில் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் குடியேற்ற உரிமை இனி எளிதில் வாங்கமுடியாது. ஏனெனில் இதய நோய், சுவாசக்கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்த கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு குடியேற்ற விசா வழங்கவேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தன் அலுவல் ரீதியான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
உலகம் முழுவதிலும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களுக்கு இந்த உத்தரவு பறந்துள்ளது. அதற்கு காரணமாக அவர்கள் கூறுவது, சுற்றுலா விசா, மாணவர் விசா, வணிக விசாவை பெற்று அமெரிக்காவில் நுழையும் வெளிநாட்டினர், அங்கேயே குடியேற்ற விசாவை பெற்று நீண்டகாலம் வாழ்கிறார்கள். இவ்வாறு குடியேற்ற விசா வாங்குபவர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் அனைத்து சுகாதார திட்டங்களின் பலன்களையும் அனுபவிப்பதால் அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்ததால் கடந்த ஆண்டு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியேற்ற விசாக்கள் இல்லாத மற்ற விசாக்கள் பெற்றிருப்பவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
டிரம்பின் இந்த உத்தரவு, சட்டப்பூர்வமாக குடியேற்ற உரிமை கோருபவர்கள் மீது விழுந்த பலத்த அடியாகும். ஏற்கனவே இதற்காக விண்ணப்பம் செய்தவர்கள் நீரிழிவு போன்ற சாதாரண நோய்க்காக குடியேற்ற விசா வாங்குவது இயலாததாகிவிடும். நீரிழிவும், ரத்த அழுத்தமும் சாதாரண நோயாகும்.
20 வயது முதல் 79 வயது வரை உள்ளவர்களில் 11.1 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முதல் 10 நாடுகளை கணக்கிட்டிருக்கிறார்கள். அதில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது. உடல் பருமனும் வாழ்க்கைமுறை மாற்றத்தினால் வரும் சாதாரணமான நிகழ்வுதான். அந்த பட்டியலிலும் இந்தியர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.
ஆக அமெரிக்காவின் புதிய உத்தரவால் அதிகம் பாதிக்கப்படப்போவது சீனாவும், இந்தியாவும்தான். இந்த திட்டத்திற்கு எதிராக அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர். இந்த உத்தரவு கோர்ட்டில் நிலைத்து நிற்காது என்பது அவர்களின் கூற்றாகும்.