தமிழகத்தில்வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2018-06-09 22:15 GMT
சென்னை,

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வளிமண்டலத்தில் நிலவும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பல பகுதிகளில் பரவலான மழை பெய்யும். இதுதவிர கடலோர மாவட்டங்களில் மாலையில் குளிர்ந்த காற்று வீசுவதுடன், லேசான மழைக்கும் வாய்ப்பு உண்டு.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

கோவையில் அதிக மழை

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு மற்றும் வால்பாறையில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, நீலகிரி மாவட்டம் ஜி.பஜாரில் தலா 5 செ.மீ, நீலகிரி மாவட்டம் கே.பிரிட்ஜ், நீலகிரி மாவட்டம் தேவலாவில் தலா 4 செ.மீ., நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், தேனி மாவட்டம் பெரியாரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதுதவிர கன்னியாகுமரியில் பரவலான மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அருவியில் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

மெயின் அருவியில் ‘ஆர்ச்’சை தாண்டி தண்ணீர் விழுவதாலும், ஐந்தருவியில் அதிக தண்ணீர் விழுவதாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இதேபோல் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியிலும் பலத்த காற்றுடன் நேற்று மழை பெய்தது. இதில் மின்கம்பி அறுந்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த துரைராஜ் (வயது 57) என்ற விவசாயி மீது விழுந்ததில் அவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.

கோவையில் மழை

கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. வால்பாறையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மண் சரிந்து மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் குரங்கு நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

மேலும் செய்திகள்