தண்ணீர் வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

Update: 2018-06-18 22:00 GMT
மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இதன் எதிரொலியாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் அதிகாலை தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து மாலையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 616 கனஅடி வீதமாக வந்த தண்ணீர் மாலையில் 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து நேற்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 32,421 கனஅடியானது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் 40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 45.05 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயரவாய்ப்பு உள்ளது. நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், தமிழக விவசாயிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நேற்று 2-வது நாளாக தடை நீடித்தது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பரிசல்களும் இயக்கப்படவில்லை. எனவே பரிசல்கள் ஆற்றின் கரையோரம் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மெயின் அருவி, சினி அருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படாததால் அருவிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் செய்திகள்