‘நீட்’ தேர்வு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய திருப்பு முனை தீர்ப்பினை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

‘நீட்’ தேர்வு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய தீர்ப்பினை, மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Update: 2018-07-11 00:30 GMT
திருச்சி,

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சிக்கு வந்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வு தமிழ் கேள்வித்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண் வழங்கவேண்டும் என்ற திருப்பு முனை தீர்ப்பினை மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கி உள்ளது. இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டியது மத்திய அரசும், சி.பி.எஸ்.இ.யும் தான். அதன்பிறகு தான் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பள்ளி கல்வித்துறை மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்து அறிவிப்பார்கள்.

எங்களை பொறுத்தவரை நமக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு கொண்டு வருகிற எந்த போட்டித்தேர்வாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு நன்றாக பயிற்சி அளித்து வருகிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கவேண்டும் என்பது தான் தமிழக அரசின் கொள்கை முடிவு. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சியை அளித்தோம்.

25 ஆயிரம் மாணவர்களுக்கு சி.ஏ. எனப்படும் தணிக்கை பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. சிறந்த தணிக்கையாளர்களை கொண்டு அவர்களுக்கு 500 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த திட்டம் 12-ந் தேதி (நாளை) கோபிச்செட்டிப்பாளையத்தில் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் 762 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து விட்டது. விரைவில் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்