தூத்துக்குடி போராட்ட வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களின் வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-11 22:15 GMT
மதுரை,

தூத்துக்குடியில் கடந்த மே 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இந்த நிலையில் கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் அடுக்கடுக்காக 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

அந்த மனுக்களில், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்; சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன.

மேலும் கலவர வழக்கில் சேர்க்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்தி வருவதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கலவரம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் உரிமம் வழங்கப்படாததால் ஆலை மூடப்பட்டது. ஆனாலும் இதுதொடர்பாக தொடர்ந்து போராட்டத்தில் சில அமைப்புகள் ஈடுபட்டு வந்தன. 100-வது நாளில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே சில அமைப்புகள் முடிவு செய்து செயல்பட்டு வந்தன. அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மொத்தம் 244 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 43 பேர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். 187 பேர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தேசிய, மாநில மனித உரிமை ஆணையத்தை சேர்ந்தவர்களும், மாநில அரசு நியமித்த ஒரு நபர் கமிஷனும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில் 18 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், துப்பாக்கி சூட்டில் பயன்படுத்தப்பட்டவை எந்த ரக துப்பாக்கிகள்? துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது மாவட்ட கலெக்டர் எங்கு இருந்தார் என்று கேள்வி எழுப்பினர்.

விசாரணை முடிவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 99 நாள் போராட்டங்கள் தொடர்பான வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களையும், அந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் குறித்து உளவுத்துறை போலீசார் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய அறிக்கைகளையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்