போலி பயிற்சியாளர் வீட்டில் இருந்து கணினி, ஆவணங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி சோதனை

போலி பயிற்சியாளரின் சென்னை வீட்டில் இருந்து கணினி மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-07-18 22:43 GMT
கோவை, 

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரம் விராலியூரில் உள்ள கலை மகள் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 12-ந் தேதி பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. இதில் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க பயந்த மாணவி லோகேஸ்வரியை (வயது 19) பயிற்சியாளர் ஆறுமுகம் (32) என்பவர் கீழே பிடித்து தள்ளினார்.

இதில் முதலாவது மாடியில் உள்ள ஷன்சேடில் மாணவியின் தலைபட்டதில் படுகாயம் அடைந்து லோகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆலாந்துறை போலீசார், பயிற்சியாளர் ஆறுமுகம் மீது உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தே மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்த எவ்வித பயிற்சியும் பெறவில்லை என்பதும், ஆறுமுகம் வைத்திருந்த சான்றிதழ் போலியாக தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. இவர் தமிழகம் முழுவதும் கடந்த 6 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தி ரூ.2½ கோடி வரை பணம் வசூல் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கணினி, ஆவணங்கள் பறிமுதல்

போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவே பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னை கேளம்பாக்கம் ரோட்டில் உள்ள மாம்பாக்கத்திற்கு அழைத்து சென்றனர். அங்குள்ள அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் நேற்று காலை போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் வீட்டில் இருந்து ஒரு கணினி மற்றும் பல்வேறு ஆவணங்கள் சிக்கின.

அந்த ஆவணங்கள் போலியானவையா என்பது குறித்து அவற்றை கோவை கொண்டு வந்து விசாரணை நடத்தினால் தான் தெரியவரும். மேலும் ஆறுமுகத்துக்கு உதவியதாக கூறப்படும் தனியார் அறக்கட்டளை அலுவலகம் குறித்தும் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர். தனிப்படை போலீசார் தங்கள் விசாரணையை முடித்துக்கொண்டு இன்று (வியாழக்கிழமை) கோவை திரும்புகிறார்கள்.

தபால் சேமிப்பு கணக்கில் பணம் இல்லை

பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தினால் சென்னை மாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளை நிறுவனத்தினர் தனது வங்கி மற்றும் தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் ரூ.15 ஆயிரம் செலுத்துவார்கள் என்று ஆறுமுகம் விசாரணையில் தெரிவித்துள்ளார். அந்த வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் சென்னையில் தான் உள்ளன.

ஆன்லைனில் தபால் அலுவலக சேமிப்பு கணக்கை சரிபார்த்த போது அதில் பணம் எதுவும் இல்லை. ஆனால் சென்னை மாம்பாக்கத்தில் உள்ள வங்கி கணக்கை தனிப்படையினர் சென்னை சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அதன் முழு விவரம் தனிப்படையினர் சென்னையில் இருந்து கோவை திரும்பிய பின்னர் தான் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்