‘முதல்-அமைச்சர் கைகளை பிடித்து கெஞ்சிக்கேட்டேன்’ செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்

கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரையில் இடம் கேட்டு முதல்- அமைச்சரின் கைகளை பிடித்து கெஞ்சிக்கேட்டேன் என்று செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.

Update: 2018-08-14 23:00 GMT
சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று கண்ணீர்மல்க உருக்கமாக பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையிலே உரையாற்றியவர்கள் எல்லாம் குறிப்பிட்டத்தை போல, கருணாநிதி இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் எல்லாம் தலைவரை இழந்து இருக்கிறீர்கள், நான் தலைவரை மட்டும் அல்ல தந்தையையும் இழந்து நின்றுகொண்டிருக்கிறேன்.

தலைவர் உடலை அவரை உருவாக்கிய அண்ணன் கல்லறைக்கு பக்கத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்று நாமெல்லாம் முடிவெடுத்தோம். அது நம்முடைய முடிவல்ல தலைவருடைய முடிவு, அவர் எண்ணிய எண்ணம், அவருடைய ஆசை, அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம்.

நம்முடைய முன்னோடிகள் எல்லாம் தலைவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டுமே, எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது பல நண்பர்கள் மூலமாக அரசுக்கு செய்தியை சொல்லி அனுப்புகிறோம். ஆனால், அங்கிருந்து எங்களுக்கு வந்த செய்திகள், தலைவர் கலைஞரின் ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையிலே தான் இருந்தது.

அதற்கு பிறகு, நம்முடைய முன்னோடிகள் எல்லாம் என்னிடத்தில் சொன்னார்கள், ‘நாம் நேரடியாக முதல்-அமைச்சரை சந்திப்போம், சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தால் நிச்சயமாக அவர்கள் நிறைவேற்ற முன்வருவார்கள்’ என்று சொன்னபோது நான் தயாரானேன்.

அப்போது நம்முடைய முன்னோடிகள் எல்லாம் சொன்னார்கள். ‘நீங்கள் வர வேண்டாம், நாங்கள் போகிறோம். நீங்கள் செயல் தலைவர், தலைவருடைய மகன், எனவே எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை சந்திக்க நீங்கள் வரக்கூடாது’ என்று சொன்ன நேரத்தில் இல்லை, இல்லை என்னுடைய மானம், மரியாதை, கவுரவம் எது போவதாக இருந்தாலும் தலைவருக்காக நான் எதையும் இழக்க தயாராக இருக்கிறேன். வந்தே தீருவேன் என்று சொல்லி நாங்கள் எல்லாம் முதல்-அமைச்சரை சென்று சந்தித்து, எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துச் சொல்கிறோம். நம்முடைய கோரிக்கையை எடுத்து சொல்கிறபோது முதல்-அமைச்சர் சொல்கிறார், ‘விதிமுறைகளை முடக்க வாய்ப்பில்லை, நாங்கள் சட்ட ஆலோசனை கேட்டிருக்கிறோம். அவர்களும் மறுத்திருக்கிறார்கள்’ என்றார்.

நான் அப்போது சொன்னேன், அரசு போடக்கூடிய, அரசு எண்ணக்கூடிய அந்த எண்ணத்தை தான் ‘சட்ட ஆலோசகர்கள்’ சொல்வார்கள். நாங்களும் ஆட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறோம். ஆகவே, நீங்கள் கட்டாயம் இதற்கு ஒப்புதல் தரவேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினோம்.

இன்னும் வெட்கத்தை விட்டு சொல்லுகிறேன், “முதல்- அமைச்சருடைய கைகளை பிடித்து நான் கெஞ்சிக்கேட்டேன், தலைவருடைய ஆசையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம், அதற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும்” என்று கேட்டேன்.

அப்போது கூட அவர், சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக அங்கிருந்து எங்களை விரட்டிவிடவேண்டும் என்பதற்காக “பார்ப்போம்” என்று ஒரு வார்த்தை சொன்னார். அதனை நம்பி நாங்களும் வெளியே வந்தோம்.

இந்த நிலையில் வேறு இடம் ஒதுக்கப்படுகிறது என்று தலைமைச் செயலாளரின் அறிவிப்பு வெளிவருகிறது. பார்த்ததும் நாங்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளானோம்.

அப்போது, மூத்த வக்கீல் வில்சனிடத்திலே விவாதித்தோம், நான் நீதிமன்றத்திற்கு செல்லட்டுமா? என்று கேட்கிறார். முடியுமா? என்று கேட்டோம். இல்லை, நாங்கள் இரவே நீதிபதியை சென்று சந்திக்கிறோம் என்று சொன்னார். உடனே சென்றார்.

அதற்கு பிறகு 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை 8.30 மணி அளவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். 10.30 மணிக்கு தீர்ப்பு வருகிறது.

‘அண்ணா அவருடைய சமாதிக்கு அருகிலே கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது’ என்ற தீர்ப்பு வருகிறது. அந்த செய்தியை கேட்டு இவ்வளவு பெரிய சோக சூழலிலும் அன்றைக்கு நம் எல்லோருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது.

நினைத்துப்பார்க்கிறேன். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால் என்ன நிலைமை, இந்த இயக்கத்திற்கு எத்தனையோ சோதனைகள் வந்ததுண்டு. அதிலும் குறிப்பாக, ஒருமுறை நம்முடைய கொடிக்கு நம்முடைய உதயசூரியன் சின்னத்திற்கு மிகப்பெரிய சோதனை வந்தது. அது நமக்கு உரிமை உண்டா? கொடியும் பயன்படுத்தக்கூடாது, கட்சியினுடைய பெயரை பயன்படுத்தக்கூடாது, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்ற ஒரு சூழ்நிலை வரக்கூடிய நிலையிலே தேர்தல் கமிஷனில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

அந்த விசாரணையின் தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்தது. அந்த தீர்ப்பு வந்தவுடன் கருணாநிதி எங்களிடத்தில் சொல்லுகிறார். ஒருவேளை தீர்ப்பு மாறாக வந்திருந்தால், ‘நான் அண்ணாவினுடைய சமாதிக்கு பக்கத்தில் புதைக்கப்பட்டிருப்பேன், நீங்கள் எல்லாம் வந்து எனக்கு மலர்வளையம் வைத்திருப்பீர்கள்’ என்று சொல்கிறார்.

அதைத்தான் நான் எண்ணிப்பார்த்தேன். ஒருவேளை நமக்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்று சொன்னால், கருணாநிதிக்கு பக்கத்திலே என்னை புதைக்கக்கூடிய சூழ்நிலை தான் நிச்சயமாக உருவாகியிருக்கும் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஆனால், அந்த நிலை வரவில்லை. கருணாநிதியுடைய எண்ணம், அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் மறைந்தும் இந்த போராட்டத்திலே வெற்றி பெற்றிருக்கிறார்.

அப்படிப்பட்ட நிலையிலே அவருக்கு இன்றைக்கு நாமெல்லாம் வணக்கத்தை, நம்முடைய அஞ்சலியை திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மூலமாக நாம் தெரிவித்துக்கொண்டிருக்கிறோம்.

நம்மை இன்றைக்கும் இயக்கிக்கொண்டிருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கருணாநிதி சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புவது, ‘இந்த இயக்கத்தை காப்போம், தலைவர் கருணாநிதி வழி நின்று நம்முடைய கடமையை ஆற்றுவோம்’. கருணாநிதியை உங்களுடைய உருவிலே நாங்கள் இன்றைக்கு பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட தலைவருடைய எண்ணங்களை, அவருடைய செயல்பாடுகளை, நினைவுகளை, அவர் உள்ளத்திலே கொண்டிருந்த உணர்ச்சிகளை, உணர்வுகளை காப்பற்ற உறுதி எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்