வாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை வருகிறது தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாளை (செவ்வாய்க் கிழமை) சென்னை கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-08-19 23:00 GMT
சென்னை,

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், அவரது அஸ்தியும் வைக்கப்பட இருக்கிறது. நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒவ்வொரு மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் வாஜ்பாயின் அஸ்தி வழங்கப்பட இருக்கிறது. அவர்கள் அதை பெற்றுவந்து, தங்களது மாநிலங்களில் உள்ள முக்கிய நதிகளில் அஸ்தியை கரைக்க இருக்கின்றனர்.

வாஜ்பாயின் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்தில் இருந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

வாஜ்பாயின் அஸ்தி நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை கொண்டுவரப்பட இருக்கிறது. தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு, தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது.

சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம், ராமேசுவரம் கடல், கன்னியாகுமரி கடல், மதுரையில் வைகை ஆறு, ஈரோட்டில் பவானி ஆறு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு ஆகிய இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது.

மேலும் செய்திகள்