கவர்னர் வாகனத்தை முந்திச்செல்ல முயன்ற மாணவர்கள் உள்பட 7 பேர் கைது

கவர்னர் சென்ற வாகனத்தை மோட்டார் சைக்கிளில் முந்திச்செல்ல முயன்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-09-03 22:24 GMT
அடையாறு,

சென்னை அண்ணாநகரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரவு கவர்னர் மாளிகைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவரது காருக்கு பின்னால் பாதுகாப்பு வாகனங்கள் வந்தன.

கோட்டூர்புரத்தை கடந்து சர்தார் பட்டேல் சாலையில் கார் வந்தபோது, திடீரென அதிவேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் கவர்னர் வாகனத்தை முந்திச்சென்றதாக கூறப்படுகிறது. இதை கவனித்த கவர்னரின் பாதுகாப்பு அதிகாரிகள், அடுத்து கவர்னர் வாகனத்தை நெருங்கியபடி முந்திச்செல்ல முயன்ற 4 மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தினர்.

அதில் வந்த 7 பேரையும் அவர்கள் பிடித்து அடையாறு போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ஷோபனா விசாரணை நடத்தியதில், அவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தினேஷ் (வயது 21), நவீன் (21), தனியார் கல்லூரி மாணவர்கள் மரியஅந்தோணி (20), அரி பிரசாத் (19) மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அருண் (24), கணேஷ் (25) லோகேஷ் (26) என தெரியவந்தது.

7 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்கள் வந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் பறி முதல் செய்தனர். பின்னர் அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்