எச்.ஐ.வி. தொற்று பரவுவதை தடுப்பதில் உலக அளவில் தமிழகம் 3-வது இடம்

எச்.ஐ.வி. தொற்று பரவுவதை தடுப்பதில் தமிழகம் உலக அளவில் 3-வது இடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2018-09-07 21:30 GMT
சென்னை,

சிறை மற்றும் சமூக நலத்துறை மையங்களில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் காசநோய் தடுப்பு சேவை பணிகளை விரிவுபடுத்தும் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சுகாதார அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இதற்கான விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் காசநோய் தடுப்பு சேவை செயல் திட்டத்துக்கான நெறிமுறைகள் அடங்கிய கையேட்டினை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். விழாவில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

2001-2002-ம் ஆண்டில் 1.13 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் நோயின் தாக்கம் தற்போது 0.25 சதவீதமாக குறைந்துள்ளது. இது தேசிய அளவை விட (0.29 சதவீதம்) குறைவானது. தாயிடம் இருந்து சேய்க்கு எச்.ஐ.வி. தொற்று பரவுவதை தடுப்பதில் உலக அளவில் கியூபா மற்றும் தாய்லாந்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சை வழங்குதல், கட்டணம் இல்லா பஸ் பயண அட்டை, விவசாயிகளுக்கு முதல்-அமைச்சரின் விவசாயி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் அறிக்கையின்படி காசநோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் இந்தியாவிலேயே முதலாவதாக தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 21,516 பேர் பயன் அடைந்துள்ளனர்.

கிராமங்களில் உள்ள நோயாளிகளை இல்லம் தேடிச்சென்று தீவிர காசநோயை கண்டுபிடிப்பதற்கான நவீன டிஜிட்டல் எக்ஸ்-ரே உடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனம் திட்டம் நாட்டிலேயே முன்னோடி திட்டமாக உள்ளது.

சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான ஸ்வர்தார் மற்றும் உஜ்வாலா மையங்களுக்கும் எய்ட்ஸ் மற்றும் காசநோய் தடுப்பு திட்டமும் விரிவுபடுத்தப்பட உள்ளது. சிறைச்சாலையில் இருப்பவர்களிடம் 1,000-ல் 2 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் ஏதேனும் தொற்று நோய்களை பெற்றிருந்தால் அந்த நோய் சமூகத்தில் பரவுவதற்கும், புதிதாக சிறைக்கு செல்பவர்கள் வெளியில் பெற்ற தொற்று நோய்களை சிறைக்குள் கொண்டு செல்லும் அபாயமும் உள்ளது.

நோய் பரவுதலை தடுப்பதற்கும், தொற்று பெற்றவர்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை மேற்கொள்வதற்கும் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான சிறைச்சாலைகள் மற்றும் சமூக நல மையங்களில் எய்ட்ஸ் மற்றும் காசநோய் தடுப்பு திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எய்ட்ஸ் மற்றும் காசநோய் இல்லாத மாநிலமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் காவல்துறை இயக்குனர் (சிறைச்சாலை) அசுதோஷ் சுக்லா, சமூக நல பாதுகாப்பு துறை ஆணையர் லால்பேனா, சமூக நலத்துறை இயக்குனர் அமுதவள்ளி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்