மாநில செய்திகள்
ஆதாரங்களை கேட்டு சி.பி.ஐ.க்கு கடிதம் குட்கா லஞ்ச விவகாரம் குறித்து அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை

குட்கா லஞ்ச விவகாரம் குறித்து அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை களத்தில் குதித்தது. இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. கைது செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை,

சென்னை செங்குன்றத்தில் இயங்கி வந்த குட்கா ஆலையில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2016-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது குட்கா ஊழல் ‘டைரி’ அதிகாரிகள் கையில் சிக்கியது.

அதில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு ஆலையின் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோர் சார்பில் இடைத்தரகர்கள் மூலம் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள், கலால் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் பணம் கைமாறிய தகவல் இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து அப்போது ஆலையின் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனையின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ஆரம்பக்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரும் தனியாக வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் சென்ற பின்னர், அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. குட்கா ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகள் உள்பட நாடு முழுவதும் 35 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 5-ந் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை முடிந்த கையோடு குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ், அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகிய 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் குட்கா ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் சென்னை நொளம்பூரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், குட்கா முறைகேட்டில் தன் கீழ் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் பெயர்களையும் தொடர்புபடுத்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜார்ஜூக்கு தமிழ் தெரியும் என்றாலும் அவருடைய பேட்டி முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்தது. சில நிருபர்கள் தமிழில் கேட்ட கேள்விகளுக்கும், அவர் ஆங்கிலத்திலேயே பதில் அளித்தார். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தன்னுடைய விளக்கம் மற்றும் குற்றச்சாட்டு தெரிய வேண்டும் என்பதற்காகவே ஜார்ஜ் ஆங்கிலத்திலேயே பேட்டி அளித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் குட்கா ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை களத்தில் இறங்கி உள்ளனர். இதற்காக சி.பி.ஐ. சோதனையில் தற்போது சிக்கிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை தங்களிடம் தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை ஒப்படைக்கும்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே ஆரம்பக்கட்டத்தில் நடத்திய விசாரணையின்போது கைப்பற்றிய ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணையை தொடங்குவார்கள்.

அதனடிப்படையில் குட்கா ஊழல் விவகாரத்தில் சட்டவிரோதமாக யாருக்கு, யார்? பணம் பரிமாறி உள்ளது என்பதை கண்டறிந்து அவர்களுடைய வீடுகள் மற்றும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனையிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குட்கா ஊழல் நடந்தது உண்மை என்று முன்னாள் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் ஒப்புதல் அளித்ததுடன், இதில் தன் கீழ் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் பெயர்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். ஜார்ஜ் குறிப்பிட்டுள்ள போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

விசாரணை முடிவில் அதிரடி நடவடிக்கைகள், குறிப்பாக கைது நடவடிக்கை மற்றும் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.