மாநில செய்திகள்
விழுப்புரம் எஸ்.பி. மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது: அமைச்சர் சி.வி.சண்முகம்

குட்கா ஊழல் விவகாரத்தில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை,

குட்கா விற்க ரூ. 40 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக வந்த புகாரில் சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் சிக்கினார். அதன்பேரில் சென்னை நொளம்பூரில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சிபிஐ சோதனை குறித்து ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சென்னையில் துணை கமி‌ஷனராக இருந்த ஜெயக்குமார் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார். ஜெயக்குமார் பணியில் இருந்தபோது குட்கா, ஊழல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடந்தது. அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த ஊழல் தொடர்பான தகவல்களை ஜெயக்குமார் என்னிடம் தரவில்லை. ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஜெயக்குமாருக்கு தெரியும். அவர் பணியில் சரியாக செயல்படவில்லை என்று கூறினார்.

இதனிடையே மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் எஸ்.பி.யாக பணியாற்றி வரும் நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். மேலும் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என கூறினார்.