மாநில செய்திகள்
கம்பத்தில் பரிதாபம் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை

கம்பத்தில், 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்,

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் அருகே உள்ள சமையன்தெருவை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 34). இவர், கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயமணி (28). இவர்களுடைய மகள் தேஜாஸ்ரீ (8), மகன் கார்த்தி விஸ்வநாதன் (3). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேஜாஸ்ரீ 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அழகுதுரை, வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அழகுதுரை கதவை தட்டிப்பார்த்தார். இருப்பினும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அழகுதுரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் விட்டத்தில் ஜெயமணி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தைகளை தேடியபோது காணவில்லை. வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தேஜாஸ்ரீயும், கார்த்தி விஸ்வநாதனும் பிணமாக மிதந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜெயமணி உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு ஜெயமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.