ராமசாமி படையாச்சியாருக்கு வெண்கல சிலையுடன் நினைவு மண்டபம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

கடலூரில் ரூ.2 கோடி செலவில் ராமசாமி படையாச்சியாருக்கு வெண்கல சிலையுடனான நினைவு மண்டபத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Update: 2018-09-13 22:00 GMT
சென்னை, 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் ராமசாமி படையாச்சியார், தென்ஆற்காடு மாவட்டம் எனப்படும் தற்போதைய கடலூர் மாவட்டத்தில் 1918-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். அவர் கடலூர் தொகுதியிலிருந்து 1952-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், திண்டிவனம் தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் ராமசாமி படையாச்சி 1954 முதல் 1957 வரை உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அவர் மக்கள்நலப் பணியோடு சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.

முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு தொடங்கப்பட்டு வன்னியர் சமூகத்திற்கு மாநிலத்தில் 20 சதவீத இடஒதுக்கீடும், மத்தியில் 2 சதவீத இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை உழைப்பாளர் கட்சி மாநாட்டில் நிறைவேற்றியவர் ராமசாமி படையாச்சியார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 29.6.2018 அன்று சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், “சமூகநீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான மறைந்த மரியாதைக்குரிய ராமசாமி படையாச்சியாரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16-ந்தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்” என்று அறிவித்தார்.

மேலும், 19.7.2018 அன்று நடந்த சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் ராமசாமி படையாச்சியாருக்கு அவர் பிறந்த கடலூர் மாவட்டத்தில் முழுஉருவ வெண்கலச் சிலையுடன் கூடிய நினைவுமண்டபம் அமைக்கப்படும்” என அறிவித்தார்.

அதன்படி, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு ரூ.2.15 கோடி மதிப்பீட்டில், 0.69 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள முழுஉருவ வெண்கல சிலையுடன் கூடிய நினைவுமண்டபத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செம்மலை, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ரா.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்