“தவமிருந்து பெற்ற பிள்ளைகளை நோய் காவு வாங்கிவிட்டது” பக்கத்து வீட்டு பெண் கண்ணீர் பேட்டி

“தவமிருந்து பெற்ற பிள்ளைகளை நோய் காவு வாங்கிவிட்டது” பக்கத்து வீட்டு பெண் கண்ணீர் பேட்டி

Update: 2018-10-22 22:30 GMT
சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலால் சந்தோஷ்குமார்-கஜலட்சுமி தம்பதியின் குழந்தைகள் தக்‌ஷன், தீக்‌ஷா ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து சந்தோஷ்குமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி என்பவர் கூறியதாவது:-

சந்தோஷ்குமார்-கஜலட்சுமி தம்பதி திருமணமானது முதல் எங்கள் வீட்டருகே தான் குடியிருந்து வருகின்றனர். திருமணமாகி 5 வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவர்கள் மனம் நொந்து இருந்தனர்.

சந்தோஷ்குமார்-கஜலட்சுமி தம்பதி ஆன்மிகத்தில் தீவிர நாட்டம் கொண்டவர்கள். தெய்வ பக்தி மிகவும் கொண்டவர்கள். குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக சுற்றினர். பல வழிபாடுகளை மேற்கொண்டனர். பல மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று நேர்த்திக்கடன்களை செலுத்தி வந்தனர்.

இந்தநிலையில் இறைவன் அருளாலும், மருத்துவ சிகிச்சை முறைகளை முறையாக மேற்கொண்டதாலும் கஜலட்சுமி கர்ப்பம் தரித்தார்.

கஜலட்சுமிக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதனால் அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி அவர்கள் மகிழ்ந்தனர்.

தனது குழந்தைகளை மிகவும் அக்கறையுடன் வளர்த்து வந்தனர். சிறிய காயம் ஏற்பட்டால் கூட கஜலட்சுமி துடித்து விடுவார்.

கடந்த வாரம் குழந்தைகள் இருவருக்குமே காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதற்கிடையில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் என்று தெரிந்ததுமே சந்தோஷ்குமார்-கஜலட்சுமி தம்பதி மனதளவில் உடைந்து விட்டனர். இருந்தாலும் தவம் இருந்து பெற்ற பிள்ளைகளை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று இறைவனை வேண்டிக்கொண்டு இருந்தனர். தவமிருந்து பெற்ற பிள்ளைகளின் உயிரை நோய் காவுவாங்கிவிட்டது. இது எங்கள் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எங்கள் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடுகளே இதற்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்